‘‘வடக்கு கடலில் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினையை இந்தியாவால் சுலபமாகத் தீர்த்துவைக்கலாம். அதுவே இந்தியா வடக்கு தமிழர்களுக்குச் செய்யும் உதவியாகவும் இருக்கும்’’ என அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க நேற்று (05/03/2025) பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்டத்தின் மீன்பிடி அமைச்சு மீதான குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது மேற்கண்டவாறு தெரிவித்த அவர் மேலும் கூறியதாவது,
‘‘நாட்டில் வடக்கு மாகாணத்தில் தான் அதிகளவான மீனவர்கள் இருக்கிறார்கள். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் மீன்பிடி மற்றும் மீன்பிடி சார்ந்த தொழில்களில் ஈடுபடுகிறார்கள். வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் குருநகர் போன்ற பகுதிகளில் மிகவும் கஷ்டமான மக்கள் வாழ்கிறார்கள்.
கடற்றொழிலை மேம்படுத்துவதை போன்று அந்த தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடும் மக்களின் வாழ்வாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும்.
அதற்கான பொறுப்பு கடற்றொழில் வளங்கள் அமைச்சுக்கு உண்டு.
வரவு செலவுத் திட்டத்தில் வடக்கு மாகாண அபிவிருத்திக்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மீன்பிடி மற்றும் அதனுடனான இணை கைத்தொழில்களை மேம்படுத்துவதற்கும் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வடக்கில் அதிகளவான கடற்றொழிலுடன் தொடர்புடைய வளங்கள் காணப்படுகின்றன. அதிக வளங்கள் இருந்தபோதும் வடக்கிலுள்ள மீனவர்கள் தெற்கிலுள்ள மீனவர்களை விட வறுமையில் இருக்கிறார்கள்.
இந்திய மத்திய அரசிடமும் தமிழ்நாடு அரசிடமும் விசேட கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன். யுத்தம் மற்றும் பல்வேறு காரணிகளால் இலங்கையர்கள் படகு ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு செல்லும்போது அவுஸ்திரேலிய அரசாங்கம் படகு ஊடாக அவுஸ்திரேலியாவுக்கு வர வேண்டாம் என்று பல விளம்பரங்களை அழுத்தமாக வெளியிட்டார்கள். அத்துடன் சட்ட ரீதியிலான அறிவுறுத்தல்களும் விடுக்கப்பட்டன.
மீன்பிடி கைத்தொழிலை தவிர்த்து வடக்கு மக்களுக்கு வேறு எந்த வாழ்வாதாரமும் கிடையாது. போர்க் காலத்தில் வடக்கு மக்கள் இந்தியாவுக்கு சென்றபோது மக்களை இந்திய அரசு மதித்தது. அதனை நாங்கள் மதிக்கிறோம். ஆனால், தற்போது வடக்கு மக்களுக்கு செய்யவேண்டிய முக்கிய பொறுப்பாக, வடக்கு மக்களின் ஒரே ஜீவனோபாயத்தை இல்லாதொழிக்க இடமளிக்க வேண்டாம் என்று இந்திய அரசிடம் தயவுடன் கேட்டுக்கொள்கிறோம். இந்தியாவில் உள்ள சட்டங்களை செயற்படுத்துங்கள். இவற்றை செயற்படுத்தாமல் வடக்கு மக்களின் நலன்புரி பற்றி பேச முடியாது’’ என்றார்
இதன்போது எழுந்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினருமான மனோ கணேசன்,
‘‘உங்களின் கருத்து மிகவும் முக்கியமானது. இந்தியப் பிரதமர் எதிர்வரும் மாதம் இலங்கைக்கு வருகை தரவுள்ளார். ஆகவே தயவுசெய்து பேச்சுவார்த்தை ஒழுங்கில் இந்த விடயத்தையும் இணைத்துக் கொள்ளுங்கள். வடக்கு மக்களுக்கு இது பாரியதொரு பிரச்சினை. எமது சொத்துகளை கொள்ளையடித்துச் செல்கின்றனர். யுத்தம் முடிந்து 15 வருடங்களாகிவிட்டன. இந்தியா உதவி செய்தது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆகவே இந்தப் பிரச்சினைக்கு உடனடியாகத் தீர்வு காணுங்கள் நாங்களும் ஒத்துழைப்பு வழங்குகின்றோம்’’ என்றார்.
தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் பிமல் ரத்நாயக்க,
‘‘இது பாரதூரமான பிரச்சினை. அத்துமீறிய மீன்பிடி நடவடிக்கைகளை இந்திய அரசாங்கத்தினால் நிறுத்த முடியும். இந்திய அரசாங்கம் இலங்கைக்கு பல உதவிகளை செய்கிறது. வடக்கு மக்களின் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணாமல் வழங்கும் உதவிகள் உண்மையானதாக அமையாது. இந்திய மீனவர்களின் எல்லை மீறல் செயற்பாடு நாளாந்தப் பிரச்சினையாகவே உள்ளது.
இந்திய அரசாங்கம் இந்த பிரச்சினையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும். மக்கள் சுதந்திரமாக தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு இடமளிக்க வேண்டும். இந்திய அரசாங்கம் இந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காண வேண்டும். இந்தியப் பிரதமரின் விஜயத்தின் போது இவ்விடயம் குறித்து விசேட கவனம் செலுத்துவோம். மக்கள் பாதிப்படையும்போது அவர்களை மீட்பது மாத்திரம் உதவியல்ல, அவர்களின் நலன்புரி செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதும் முக்கிய உதவியாக கருதப்படும்’’ என்றார்.








