நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவின் திருமணத்தின் போது பயன்படுத்தப்பட்ட மின்சாரத்துக்கான கட்டணம் 2.68 மில்லியன் ரூபாய்  செலுத்தப்படாமை தொடர்பான அடிப்படை உரிமை மனு மீதான விசாரணையை உச்ச நீதிமன்றம் டிசம்பர் 4ஆம் திகதிக்கு நிர்ணயித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் வீரகெட்டிய இல்லத்தில் திருமணத்திற்காக வழங்கப்பட்ட மின்சாரத்திற்கான கட்டணத்தை அறவிடத் தவறியமை பொதுமக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தெரிவித்து தீர்ப்பு வழங்குமாறு குறித்த மனு கோருகிறது.

குறித்த மனு நேற்று வெள்ளிக்கிழமை (24) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களை கருத்தில் கொண்டு, தற்போது இலங்கை மின்சார சபை மறுசீரமைப்பில் காணப்படுவதால், தொடர்புடைய வாரிசு நிறுவனத்தை பிரதிவாதியாக சேர்க்க மனுதாரருக்கு நீதிமன்றம் அனுமதி அளித்தது.

சட்டத்தரணி விஜிதகுமாரவால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், நாமல் ராஜபக்சவின் திருமண கொண்டாட்டங்கள் 2019 செப்டம்பர் 12 முதல் 15 வரை வீரகெட்டிய இல்லத்தில் நடைபெற்றதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த நிகழ்விற்காக வழங்கப்பட்ட மின்சாரத்தின் மதிப்பு 2,682,246.57 ரூபாய் ஆகும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி சானக அப்போதைய மின்சார மற்றும் எரிசக்தி அமைச்சரிடம், கொண்டாட்டங்களின் போது இல்லத்திற்கும் சுற்றியுள்ள பகுதிகளுக்கும் பாதுகாப்பு விளக்குகளை வழங்குமாறு கோரிக்கை விடுத்ததாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடும்ப உறுப்பினர்கள் தொடர்புடைய கட்டணங்களை செலுத்த தயாராக இருப்பதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, அமைச்சர் மின்சார அதிகாரிகளுக்கு தேவையான விநியோகத்தை வழங்குமாறு பணித்ததாகவும் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், அந்த கட்டணம் இன்னும் செலுத்தப்படவில்லை என்றும், மின்சார விநியோகத்தை பெற்று பணம் செலுத்துவதை தவிர்க்க பிரதிவாதிகள் தங்கள் அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ததாகவும் மனுதாரர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும், மாதாந்திர கட்டணமான  7,390 ரூபாய் செலுத்தாமைக்காக மனுதாரரின் இல்லத்திற்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும், ஆனால் வீரகெட்டிய இல்லத்துடன் தொடர்புடைய கணிசமாக பெரிய கட்டணத்திற்கு அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இது சட்டத்தின் முன் சமத்துவமற்ற நிலை என்று கூறி, அரசியலமைப்பின் பிரிவு 12(1) இன் கீழ் உத்தரவாதம் அளிக்கப்பட்ட தனது அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாக அறிவிப்பை மனுதாரர் கோரியுள்ளார்.

நாமல் ராஜபக்சவின் திருமணத்திற்கான மின்சார கட்டணத்தை தான் செலுத்தியதாக முன்னாள் இராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த தனது மறைவுக்கு முன்னர் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here