20,000 ரூபா இலஞ்சம் கோரி,அதனை பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் பரிசோதகர் ஒருவரும், பொலிஸ் கோன்ஸ்டபிள் ஒருவரும் ஒகஸ்ட் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவருக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை இலகுபடுத்துவதற்காக இலஞ்சம் கோரி அதனை பெற்றுக்கொண்டதாக குற்றம் சாட்டப்பட்டு, இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் அதிகாரிகளால் அவ்விருவரும் கைது செய்யப்பட்டனர்.
சந்தேகநபரிடம் இருந்த முழு ஐஸ் போதைப்பொருள் அளவு தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்காது, 70 மில்லிகிராம் ஹெரோயின் தொடர்பில் மட்டும் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்து சிறிய தண்டனைக்கு உட்படுத்துவதற்கும், எதிர்காலத்தில் அவர் தொந்தரவின்றி செயல்பட வழிவகுப்பதற்கும் இந்த பணம் கோரப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
கடந்த ஒகஸ்ட் 17 ஆம் திகதி பொலிஸ் பரிசோதகர் பெரியநிலாவளை பொலிஸ் நிலையத்திலும், பொலிஸ் கொன்ஸ்டபிள் கல்முனை குடி 9 சஹீரா வித்தியாலயத்திற்கு முன்பாகவும் இலஞ்ச ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அதன்பின்னர் சந்தேகநபர்கள் கல்முனை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு ஒகஸ்ட் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.








