ஏப்ரல் 21 பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் 6 ஆண்டுகள் பூர்த்தியாவதை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.

 2019ஆம் ஆண்டு ஏப்ரல் 21ஆம் திகதி அன்று, கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சுற்றுலா விடுதிகள் உட்பட நாட்டின் 8 இடங்களில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களில் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததுடன் 407 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதல் இடம்பெற்று இன்றுடன் 6 வருடங்கள் பூர்த்தியாகின்ற போதிலும் தாக்குதலுக்கு காரணமானவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பதுடன், பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்கவில்லை.

இவ்வாறானதொரு பின்னணியில் ஏப்ரல் 21 தாக்குதலின் 6ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு கொழும்பு கொச்சிக்கடை புனித அந்தோனியார் தேவாலயத்தில் இன்று காலை 8.30 அளவில் விசேட ஆராதனைகள் இடம்பெறவுள்ளன.

பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித்தின் தலைமையில் இந்த ஆராதனை நிகழ்வு இடம்பெறவுள்ளது.

அத்துடன் குறித்த பகுதியில் இன்று நடைபவனி ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், காலை 8.45 அளவில் நாடளாவிய ரீதியாக உள்ள சகல வழிபாட்டு ஸ்தலங்களிலும் மணி ஓசை எழுப்பப்படவுள்ளதுடன், 2 நிமிட மௌன அஞ்சலியும் செலுத்தப்படவுள்ளது.

இதேவேளை, ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை நேற்றைய தினம் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் சமர்ப்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here