ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களை தடுக்கும் சட்டமூலம் தொடர்பான உச்ச நீதிமன்றத்தின் தீர்மானம் பாராளுமன்ற சபாநாயகருக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக சபாநாயகர் அலுவலகம் அறிவித்துள்ளது.

குறித்த சட்டமூலத்தின் அரசியலமைப்புக்கு அமைவான தன்மைக்கு சவால் விடுத்து தாக்கல் செய்யப்பட்ட 26 மனுக்கள் குறித்த விசாரணையை உச்ச நீதிமன்றம் நவம்பர் 9 ஆம் திகதி நிறைவு செய்ததை அடுத்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

குறிப்பிட்ட சரத்துகள் குறித்த கவலைகளுக்கு பதிலளிக்கும் வகையில், அரசாங்க திருத்தங்கள் குறித்து சட்டமா அதிபர் விளக்கமளித்திருந்தார். விசாரணையின் முடிவில், சட்டமூலத்தின் அரசியலமைப்பு தன்மை குறித்த தனது இரகசிய தீர்மானம் பாராளுமன்ற சபாநாயகருக்கும் ஜனாதிபதிக்கும் அனுப்பப்படும் என நீதிமன்றம் தெரிவித்திருந்தது.

மனுக்கள், பிரதம நீதியரசர் ப்ரீத்தி பத்மன் சூரசேன, நீதியரசர்களான அச்சல வெங்கப்புலி மற்றும் சம்பத் அபேகோன் ஆகியோர் அடங்கிய மூவர் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வினால் விசாரிக்கப்பட்டது.

விசாரணையின் போது சட்டமா அதிபர் சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் விராஜ் தயாரத்ன, குழு நிலையில் பாராளுமன்றத்தில் முன்மொழியப்பட்ட திருத்தங்களை அரசாங்கம் கொண்டுவர திட்டமிட்டுள்ளதாக நீதிமன்றத்திற்கு தெரிவித்ததுடன், குறித்த மாற்றங்கள் குறித்த விபரங்கள் அடங்கிய ஆவணம் ஒன்றையும் சமர்ப்பித்தார்.

முக்கிய முன்மொழியப்பட்ட திருத்தங்களில், அதிகபட்ச தடுப்புக்காவல் காலத்தை 72 மணி நேரத்திலிருந்து 48 மணி நேரமாக குறைத்தல், பச்சை குத்துதல் மற்றும் உடல் அடையாளங்கள் தொடர்பான சரத்துகளை நீக்குதல், மதுவரி கட்டளைச் சட்டத்தின் கீழ் உள்ள அனைத்து குற்றங்களையும், அறிவுசார் சொத்து சட்டங்களின் கீழ் உள்ள பதிப்புரிமை குற்றங்களையும் நீக்குதல், மற்றும் தீவிர குற்ற வழக்குகள் குறித்த தகவல்களை வெளியிடுவதற்கு முன் நீதிமன்ற அனுமதி பெற வேண்டும் என்ற சரத்தை மீளப்பெறுதல் ஆகியவை அடங்கும்.

கைது செய்யப்பட்டவர்களை தடுத்து வைத்தல் மற்றும் தடுப்பு உத்தரவுகளை பிறப்பித்தல் தொடர்பான திருத்தங்கள் பின்னர் கையாளப்படும் எனவும் நீதிமன்றத்திற்கு தெரிவிக்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here