நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அடுத்த சில நாட்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழைக்கு சாதகமான வளிமண்டல நிலைமை உருவாகி வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று (20) வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பில், மேல், சப்ரகமுவ, வடமேல், மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளையில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக திணைக்களம் தெரிவித்துள்ளது.
கிழக்கு மாகாணத்தின் கடலோரப் பகுதிகளிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் மழை பெய்யும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகாலை வேளையில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் பனிமூட்டமான நிலை காணப்படலாம் எனவும் திணைக்களம் மேலும் எச்சரித்துள்ளது.
இதேவேளை, நாளை (21) க்கான முன்னறிவிப்பின்படி, காலி, கண்டி, நுவரெலியா, இரத்தினபுரி மற்றும் மன்னார் ஆகிய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
கொழும்பு மற்றும் மட்டக்களப்பில் சில இடங்களில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் திருகோணமலையில் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
அனுராதபுரம் மற்றும் இரத்தினபுரியில் அதிகபட்ச வெப்பநிலை 33°C ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படும் அதேவேளை, நுவரெலியாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 12°C ஆக பதிவாகும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் காரணமாக ஏற்படக்கூடிய சேதங்களை குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.







