இலங்கைக்கு கடல் வழியாக கடத்தப்பட இருந்த 71.24 கிலோகிராம் ஹெராயினை இந்தியாவின் வருவாய் புலனாய்வு இயக்குனரகம் (DRI) பறிமுதல் செய்துள்ளதோடு, இது தொடர்பில் சென்னையில் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்துள்ளது.

2026 ஆம் ஆண்டில் இதுவரை அந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிகப்பெரிய ஹெராயின் பறிமுதல்களில் இதுவும் ஒன்றாகும் என இந்திய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், அதிகாரிகள் நவம்பர் 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் சென்னையில் கண்காணிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு, சந்தேகத்திற்கிடமான வாகனம் ஒன்றையும், அதற்கு பாதுகாப்பாக சென்ற மோட்டார் சைக்கிள் ஒன்றையும் மடக்கிப் பிடித்துள்ளனர்.

வாகனத்தை சோதனையிட்டபோது, 69 பொதிகளில் வெள்ளை நிற பொடி போன்ற பொருள் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டது. அதன் மொத்த எடை 71.24 கிலோகிராம் ஆகும்.

முதற்கட்ட விசாரணையில், இந்த போதைப்பொருள் சரக்கு சென்னை ஊடாக கொண்டு செல்லப்பட்டு, திருச்சிராப்பள்ளி (திருச்சி) வழியாக கடலோர கடத்தல் பாதையில் இலங்கையை சென்றடைய இருந்தமை தெரியவந்துள்ளது.

இரண்டு வாகனங்களும் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இரண்டு சந்தேகநபர்களும் இந்தியாவின் போதைப்பொருள் மற்றும் மனோவியல் பொருட்கள் சட்டத்தின் (NDPS) கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஒக்டோபர் 2026 இல், நாகப்பட்டினம் அருகே உள்ள கடலோர கிராமம் ஒன்றில் 137 கிலோகிராம் மெத்தம்பெட்டமைனை அதிகாரிகள் பறிமுதல் செய்த மற்றொரு பெரிய நடவடிக்கையை தொடர்ந்து இந்த பறிமுதல் இடம்பெற்றுள்ளதாக DRI தெரிவித்துள்ளது.

 

அந்த சரக்கும் இலங்கைக்கு கடத்தப்பட இருந்ததாக சந்தேகிக்கப்பட்டது.

இந்த தொடர்ச்சியான பறிமுதல்கள், இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் செயற்படும் எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் வலையமைப்புகளை முறியடிக்க மேற்கொள்ளப்படும் முயற்சிகளை எடுத்துக்காட்டுவதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here