மதுபோதையில் வாகனம் செலுத்திய குற்றத்திற்காக, 58 வயதான இலங்கை போக்குவரத்து சபை (இ.போ.ச.) பேருந்து சாரதி ஒருவரின் சாரதி அனுமதிப்பத்திரம் வாழ்நாள் முழுவதும் இரத்து செய்யப்பட்டுள்ளது.

பொலிஸாரின் தகவலின்படி, கொழும்பிலிருந்து குருநாகல் நோக்கி சென்ற பேருந்தை அந்த சாரதி செலுத்திச் சென்றுள்ளார். வியாழக்கிழமை (19) மருதானை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த போக்குவரத்து பொலிஸார், சங்கராஜ மாவத்தையில் வைத்து சோதனைக்காக பேருந்தை நிறுத்த முயன்றுள்ளனர்.

எனினும், சாரதி பொலிஸாரின் உத்தரவை புறக்கணித்து தொடர்ந்து பேருந்தை செலுத்திச் சென்றுள்ளார். இதனையடுத்து பொலிஸார் பேருந்தை துரத்திச் சென்று நிறுத்தியுள்ளனர்.

சோதனையின் போது, சாரதி மது அருந்தியிருந்தது குறித்து பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அவர் கைது செய்யப்பட்டதுடன், மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் அவர் மது அருந்தியிருந்தமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாரம்மல பகுதியைச் சேர்ந்த 58 வயதான சந்தேகநபர், கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இல. 07 இல் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

அவருக்கு ரூ. 35,000 அபராதம் விதித்த நீதிமன்றம், அவரது சாரதி அனுமதிப்பத்திரத்தை வாழ்நாள் முழுவதும் இரத்து செய்யுமாறும் உத்தரவிட்டது.

நீதிமன்றத்தின் தீர்ப்பை பொலிஸ் ஊடகப் பிரிவு வியாழக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் உறுதிப்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here