வட்டவளை, டெம்பிள்ஸ்டோ தோட்டத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் இன்று (17) காலை வழங்கப்பட்ட உணவு விஷமான நிலையில் 35 சிறுவர்கள் வட்டவளை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த காலை உணவை உட்கொண்ட பின்னர் ஏற்பட்ட வாந்தி, மயக்கம் மற்றும் நெஞ்சு வலி காரணமாக இந்த சிறுவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வட்டவளை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் ஒருவர் தெரிவித்தார்.
காலை உணவுக்காக சோறு, உருளைக்கிழங்கு, பீட்ரூட் கறி மற்றும் கீரை வகை வழங்கப்பட்டுள்ளது.
அந்த பாடசாலையில் 3 ஆம் வகுப்பு முதல் 5 ஆம் வகுப்பு வரை கல்வி கற்கும் சிறுவர்கள் இவ்வாறு நோய்வாய்ப்பட்டுள்ளதுடன், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இல்லை என மாவட்ட வைத்தியர் தெரிவித்தார்.
சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்கள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







