குருநாகலில் இருந்து மாத்தளை நோக்கி இரண்டு மோட்டார் சைக்கிள்களில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு நண்பர்கள் யட்டவத்த பகுதியில் இடம்பெற்ற இரண்டு துரதிர்ஷ்டவசமான விபத்துகளில் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மாத்தளை யட்டவத்த வீர பராக்கிரம வித்தியாலயத்திற்கு அருகில் உள்ள புத்தர் சிலை அருகே ஒரு மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து புத்தர் சிலையில் மோதியதில் முதல் விபத்து இடம்பெற்றுள்ளது.
அந்த விபத்தில் பலத்த காயமடைந்த 28 வயதுடைய தனியார் துறை ஊழியரான இளைஞரை, பின்னால் வந்த அவரது நண்பர் உடனடியாக முச்சக்கரவண்டியில் ஏற்றி வைத்தியசாலைக்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்துள்ளார்.
அதன் பின்னர், காயமடைந்தவரை ஏற்றிச் சென்ற முச்சக்கரவண்டியின் பின்னால் தனது மோட்டார் சைக்கிளை செலுத்திச் சென்ற மற்ற நண்பர், யட்டவத்த எஹட்டுவெவ பகுதியில் முன்னால் வந்த கார் ஒன்றிலும் அருகில் இருந்த மின் கம்பத்திலும் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார்.
அந்த விபத்தில் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற 24 வயதுடைய விசேட அதிரடிப் படை அதிகாரி சம்பவ இடத்திலேயே துரதிர்ஷ்டவசமாக உயிரிழந்துள்ளார்.
புத்தர் சிலையில் மோதி முதலில் விபத்துக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட 28 வயதுடைய இளைஞரும் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் மாத்தளை யட்டவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.







