களனி பல்கலைக்கழகத்தின் ராகம மருத்துவ பீட மருத்துவ ஆராய்ச்சிக் குழு, உயர் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் புதிய மருந்தொன்றை உருவாக்கியுள்ளது என்று பல்கலைக்கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
புதிய மருந்து, உயர் இரத்த அழுத்த நோயாளிகளுக்கு வழக்கமாக வழங்கப்படும் மூன்று மாத்திரை முறையை மாற்றும் வகையில், மூன்று வகையான எதிர்-இரத்த அழுத்த மருந்துகளை ஒரே மாத்திரையாக இணைக்கிறது.
மருத்துவ பரிசோதனைகளின் அடிப்படையில், இந்த மருந்து உயர் இரத்த அழுத்தத்தால் ஏற்படும் இரத்த நாள வெடிப்பு மற்றும் பக்கவாத அபாயத்தை சுமார் 60 சதவீதம் வரை குறைக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நரம்பியல் நிபுணர் டாக்டர் பிம்சாரா சேனநாயக்க கூறியதாவது: “சுமார் 80% பக்கவாதங்கள் இரத்த நாள அடைப்பு அல்லது தமனி வெடிப்பால் ஏற்படுகின்றன. இரத்த அழுத்தத்தை திறம்பட கட்டுப்படுத்துவதன் மூலம் இந்த புதிய மருந்து, மீண்டும் பக்கவாதம் வருவதற்கான அபாயத்தை 60% வரை குறைக்கும்.” என கூறியுள்ளார்.
இதேவேளை, இருதயநோய் நிபுணர் டாக்டர் கோத்தபாய ரணசிங்க குறிப்பிட்டதாவது, “30 முதல் 80 வயதுக்குட்பட்ட இலங்கையர்களில் சுமார் 35% பேர் உயர் இரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த புதிய மருந்து இரத்த அழுத்தத்தை விரைவாகக் கட்டுக்குள் கொண்டுவருவதுடன், நாள் முழுவதும் நிலைத்தன்மையை வழங்குகிறது. இது உயர் இரத்த அழுத்த சிகிச்சையில் ஒரு முக்கிய திருப்புமுனையாகும்.”என குறிப்பிட்டுள்ளார்.








