ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலத்திற்கு அரசாங்கம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழுவின் அனுமதி கிடைத்துள்ளது.
குறித்த அனுமதி, அரசாங்கம், நீதி மற்றும் சிவில் பாதுகாப்பு தொடர்பான துறைசார் மேற்பார்வைக் குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக அவர்களின் தலைமையில் பாராளுமன்றத்தில் கூடியபோது இடம்பெற்றது.
இதன்போது 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்பு சட்டத்தை நடைமுறைப்படுத்தும் போது எழுந்துள்ள நடைமுறைச் சிக்கல்கள், சட்டத்தின் சிங்கள மற்றும் ஆங்கில பிரதிகளுக்கு இடையே உள்ள முரண்பாடுகள், சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் பிரகடனங்களை சமர்ப்பிப்பதற்கான மின்னணு முறை மற்றும் அதற்கான பொதுமக்களின் அணுகல் குறித்து நீண்ட விவாதம் நடைபெற்றது.
மேலும், சட்டத்தை திறம்பட நடைமுறைப்படுத்துவதற்கு உள்ள தொழில்நுட்ப மற்றும் நிர்வாக சிக்கல்களை தீர்ப்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து விவாதித்த பின்னர், ஊழல் எதிர்ப்பு (திருத்த) சட்டமூலத்திற்கு குழுவின் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.







