ஈரான் போரில் அமெரிக்காவின் முதன்மையான முன்னுரிமை அமெரிக்கர்களுக்கான எண்ணெய் மற்றும் பெட்ரோல் விலையை குறைவாக வைத்திருப்பதே என அமெரிக்க பிரதி ஜனாதிபதி ஜே.டி வான்ஸ் தெரிவித்துள்ளார்.
அத்துடன் ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுப்பது இரண்டாவது முதன்மை குறிக்கோள் என்றும் அவர். தெரிவித்தார்.
போரில் நுழைந்ததற்கான ஒரே நோக்கம் ஈரான் அணு ஆயுதம் பெறுவதை தடுப்பது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கூறியதோடு, அதற்காக அமெரிக்கர்கள் குறுகிய கால பொருளாதார தியாகங்களை செய்ய வேண்டியிருந்தாலும் பரவாயில்லை என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் அமெரிக்க பிரதி ஜனாதிபதி மற்றுமொரு காரணத்தை முன்வைத்துள்ளார்.
இதேவேளை ஹோர்முஸ் நீரிணையின் கட்டுப்பாட்டை மையமாக கொண்டே தற்போது போர் நகர்கிறது என்பதையும் வான்சின் கருத்துகள் அடிக்கோடிட்டு காட்டுகின்றன.
இது குறித்து மேலும் ஊடகத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள வான்ஸ்,
“எண்ணெய் விலை இன்று குறைந்துள்ளது. மோதலின் ஆரம்ப நாட்களில் இருந்த உச்சத்தை விடவும் மிகவும் குறைவாக உள்ளது. அதுதான் இலக்கு எண் ஒன்று – நம் நாடு முழுவதும் உள்ள அமெரிக்கர்களுக்கு எண்ணெய் மற்றும் எரிவாயுவை மலிவாக வைத்திருப்பது” என தெரிவித்தார்.
“அத்துடன் எமது வெளிப்படையாக இலக்கு எண் இரண்டு – ஈரான் ஒருபோதும் அணு ஆயுதத்தை பெறாமல் இருப்பதை உறுதி செய்வது” என்றும் அவர் கூறினார்.
மேலும் ட்ரம்ப் “இராஜதந்திர, இராணுவ மற்றும் பொருளாதாரம்” என பல கருவிகளுடன் அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பதாகவும் வான்ஸ் கூறினார்.
நீரிணையை மீண்டும் திறக்க வோஷிங்டனும் தெஹ்ரானும் தங்கள் நிபந்தனைகளில் உறுதியாக இருப்பதால், இராஜதந்திர பாதை தடுக்கப்பட்டுள்ளது என்பதால் பொருளாதார அழுத்தத்தில் கவனம் செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
அவரது இராணுவ விருப்பங்கள் குறித்து, சில ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களின் இருப்புக்கள் வேகமாக குறைந்து வருவதை ட்ரம்ப் சமாளிக்க வேண்டியுள்ளது என அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன.







