ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசத்தை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதை அடுத்து, கடுவலை நீதவான் அருண புத்ததாச  அவரை பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளார்.

இந்த சட்ட நடவடிக்கையின் போது இரு தரப்பினரின் வாதங்களும் இன்று பிற்பகல் 4.30க்கு முடிவடைந்ததை தொடர்ந்து, பிணை உத்தரவை வெளியிடுவதை நீதவான் ஒத்திவைத்தார்.

அதன்படி, ஏறக்குறைய 3 மணி நேரத்தின் பின்னர் இரு தரப்பினராலும் சமர்ப்பிக்கப்பட்ட வாதங்களை கருத்தில் கொண்டு, 17 பக்கங்களை கொண்ட பிணை உத்தரவை நீதவான் வெளியிட்டார்.

இதற்கமைய சாகர காரியவசத்திற்கு 20 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீர பிணை இரண்டு மற்றும் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டது.

பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ததன் பின்னர் அவரை விடுதலை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது.

கடந்த ஓகஸ்ட் 03 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரிய தொடர்பில் சாகர காரியவசம்  வெளியிட்ட கருத்து தொடர்பில் மத்திய குற்றப் புலனாய்வு பிரிவு விசாரணைகளை ஆரம்பித்திருந்தது.

அரசாங்கத்திற்கு சேவை ஆற்றுவதை விடுத்து பொலிஸ் மா அதிபர் மக்களுக்கு சேவை ஆற்ற வேண்டும் எனவும் இல்லையேல் அவர் மக்களால் கொல்லப்படுவார் என்றும் சாகர காரியவசம் குறித்த ஊடக சந்திப்பில் கூறியிருந்தார்.

இது குறித்த விசாரணை தொடர்பான விடயங்கள் கடுவலை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், வாக்குமூலம் பெறுவதற்காக சாகர காரியவசத்திற்கு இன்று 10 ஆம் திகதி காலை மத்திய குற்றப் புலனாய்வு பிரிவிற்கு வருமாறு அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று காலை குறித்த பிரிவிற்கு வந்த சாகர காரியவசத்திடம், வாக்குமூலம் பெற்ற பின்னர் கைது செய்யப்பட்டார்.

அதனை தொடர்ந்து அவர் இன்று பிற்பகல் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.

இதன்போது எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசியல் கட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலரும் நீதிமன்ற வளாகத்திற்கு வருகை தந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here