உள்ளூராட்சி சபை தேர்தல்களில் கொழும்பு துறைமுக நகரில் வசிப்பவர்கள் வாக்களிக்க முடியாத நிலையில் இருப்பதாகவும் அந்த வகையில் அவர்களின் அடிப்படை உரிமைகள் மீறப்படுவதாகவும், உட்கட்டமைப்பு மற்றும் மூலோபாய அபிவிருத்தி துறை கண்காணிப்பு குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான எஸ்.எம். மரிக்கார் எச்சரித்துள்ளார்.

அதிகாரிகளுடனான சமீபத்திய சந்திப்பின் போது பேசிய மரிக்கார், துறைமுக நகர வாழ் மக்கள் கொழும்பு மாவட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருந்தாலும், உள்ளூராட்சி சபை தேர்தல்களில் வாக்களிக்க முடியாத நிலை உள்ளதாக சுட்டிக்காட்டினார்.

“ஜனாதிபதி அல்லது பாராளுமன்ற தேர்தல்களுக்கு அவர்கள் கொழும்பு மாவட்டத்தின் கீழ் வாக்களிக்கலாம். எனினும் உள்ளூராட்சி சபை தேர்தலில் வாக்களிப்பதற்கு அவர்களுக்கு சந்தர்ப்பம் இல்லாதுள்ளது. இது அவர்களின் அடிப்படை உரிமைகளை மீறும் செயலாகும்” என அவர் கூறினார்.

துறைமுக நகரத்திற்கென பிரத்தியேக உள்ளூராட்சி சபை ஒன்றை உருவாக்க வேண்டிய தேவை இருக்கலாம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதேவேளை இதற்கு பதிலளித்த அதிகாரிகள், 2019 ஆம் ஆண்டு உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின் படி, நிர்வாக மாவட்டங்கள் சட்டத்தின் 3 ஆம் பிரிவின் கீழ் துறைமுக நகர காணி கொழும்பு நிர்வாக மாவட்டத்தின் ஒரு பகுதியாக ஏற்கனவே சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர்.

இது மாவட்ட ரீதியிலான பிரதிநிதித்துவம் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்வதாக அவர்கள் வாதிட்டனர்.

எவ்வாறாயினும் இதனை மறுத்த பாராளுமன்ற உறுப்பினர் மரிக்கார், வர்த்தமானி அறிவிப்பு தேசிய மற்றும் மாவட்ட தேர்தல்களுக்கு உள்ளடக்கத்தை உறுதிப்படுத்தினாலும், உள்ளூர் அதிகார சபை பிரதிநிதித்துவ பிரச்சினையை அது தீர்க்கவில்லை என தெரிவித்தார்.

மேலும் இந்த விவகாரம் நீதிமன்றத்திற்கு சென்றால் துறைமுக நகர திட்டம் தாமதமாகலாம் என்றும் அவர் எச்சரித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here