கத்தோலிக்க திருச்சபையின் மறைக்கோட்பாடு எண் 2267 இன் படி, மரண தண்டனையை ஏற்றுக்கொள்ள முடியாது என கொழும்பு பேராயர் மல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான கடமையை தவறிய குற்றச்சாட்டில் முன்னாள் பொலிஸ் மா அதிபர் மற்றும் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஆகியோருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை தொடர்பில் தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தும் போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
மரண தண்டனையின் மூலம் மனித கண்ணியம் மீறப்படுவதாகவும், திருச்சபையின் போதனைக்கமைய மரண தண்டனை விதிப்பதற்கு இணங்க முடியாது என்றும் கர்தினால் ஆண்டகை வலியுறுத்தினார்.
இதேவேளை, இலங்கை நீதிமன்றத்தின் சுதந்திரத்தின் மீது தான் முழு நம்பிக்கை வைத்துள்ளதாகவும், அதன் தீர்ப்புகள் அல்லது கலந்துரையாடல்களில் எந்த வகையிலும் தலையிடும் நோக்கம் இல்லை என்றும் கொழும்பு பேராயர் மன்றம் குறிப்பிட்டுள்ளது.
2019 உயிர்த்த ஞாயிறு அன்று இடம்பெற்ற குண்டு தாக்குதல் தொடர்பில் சமீப காலமாக நடைபெற்று வரும் விவாதங்களுக்கு மத்தியில், கொழும்பு பேராயர் மன்றம் இந்த தாக்குதல்களில் பாதிக்கப்பட்டவர்களுடன் முழுமையான ஒத்துழைப்புடன் செயற்படும்.
இந்த தாக்குதல்களுடன் தொடர்புடைய பிரதான சூத்திரதாரிகள் அல்லது செயற்பட்டவர்கள் மற்றும் அனைத்து தரப்பினரையும் வெளிக்கொண்டு வருதல் மற்றும் நாட்டின் சட்டத்தின் படி பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியை வழங்குவதற்கு தொடர்ந்து செயற்படுவது ஆகியன கொழும்பு பேராயர் மன்றத்தின் உறுதியான எதிர்பார்ப்பாகும் என அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.








