நீதிமன்றத்தால் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக தண்டிக்கப்பட்ட 4,962 கைதிகளில், தற்போது 1,506 பேருக்கு மாத்திரமே புனர்வாழ்வு திட்டங்கள் வழங்கப்படுவதாக சிறைச்சாலைகள் திணைக்களம், பாராளுமன்ற குழு ஒன்றுக்கு தெரிவித்துள்ளது.

சிவில் பாதுகாப்பு துறை கண்காணிப்பு குழுவின் கூட்டத்தில் இந்த புள்ளிவிபரங்கள் வெளியிடப்பட்டன. குழுவின் தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் நஜித் இந்திக்க செயற்பட்டார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில் பரிந்துரைக்கப்படுபவர்களுக்கும் தாமாக முன்வந்து புனர்வாழ்வை நாடுபவர்களுக்கும் புனர்வாழ்வு வழங்கப்படுகிறது.

எனினும், பல்வேறு குற்றங்களுக்காக தண்டனை அனுபவிக்கும் அனைத்து கைதிகளுக்கும் புனர்வாழ்வு வாய்ப்புகளை வழங்கும் திறன் தற்போதைய முறைமையில் இல்லை எனவும் அதிகாரிகள் கூறினர்.

இலங்கையின் சிறைச்சாலைகளில் ஏற்பட்டுள்ள நெரிசலை குறைப்பதற்கான நடவடிக்கையின் ஒரு பகுதியாக, போதைப்பொருளுக்கு அடிமையானவர்களுக்கான புனர்வாழ்வு திட்டங்களை வலுப்படுத்துவது தொடர்பாக குழுவில் கலந்துரையாடப்பட்டது.

தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபையின் அதிகாரிகள், புனர்வாழ்வு திட்டங்களை விரிவுப்படுத்துதல், மேலதிக பணியாளர்களை ஆட்சேர்ப்பது மற்றும் நாடு முழுவதும் உள்ள பிரதேச செயலக மட்டத்தில் திட்டங்களை வலுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

இதனுடன், புனர்வாழ்வு பெற்றவர்கள் சமூக ஏற்றுக்கொள்ளலை பெறுவதிலும், நன்னடத்தை சான்றிதழ்களை பெறுவதிலும் எதிர்கொள்ளும் சிரமங்கள் குறித்தும் குழுவில் விவாதிக்கப்பட்டது.

புனர்வாழ்வு செயல்முறையை மேலும் பயனுள்ளதாக்க தொடர்புடைய சட்டங்கள் மற்றும் ஒழுங்குவிதிகளில் திருத்தங்கள் செய்ய வேண்டியதன் அவசியமும் வலியுறுத்தப்பட்டது.

இந்த கூட்டத்தில் சிறைச்சாலைகள் திணைக்களம், சமூக அடிப்படையிலான திருத்த சேவைகள் திணைக்களம், புனர்வாழ்வு பணியகம் மற்றும் தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here