பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம், நாளை (8) காலை 10.30 மணி வரை செல்லுபடியாகும் வகையில் எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேலும் அறிவிப்பு வரும் வரை, குறித்த கடல் பகுதிகளுக்குள் செல்வதைத் தவிர்க்குமாறு கடற்படை மற்றும் மீன்பிடி சமூகத்தினருக்கு அறிவுறுத்தியுள்ளது.
காங்கேசன்துறையிலிருந்து மன்னார் வழியாக கல்பிட்டிய வரையிலான கடல் பகுதிகள், மணிக்கு 60-70 கி.மீ. வேகத்தில் வீசும் பலத்த காற்றுடன் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாக காணப்படும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு வழியாக காங்கேசன்துறை வரையிலும், கல்பிட்டியவிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள கடல் பகுதிகளிலும், மணிக்கு 50-60 கி.மீ. வேகத்தில் காற்று வீசுவதால் அவ்வப்போது கொந்தளிப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, மன்னாரிலிருந்து கொழும்பு, காலி மற்றும் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான கடல் பகுதிகளில் அலைகளின் உயரம் சுமார் 2.0-2.5 மீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என்று திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
குறித்த பகுதிகளில் அபாய நிலை மிகவும் அதிகமாக உள்ளதாக அதிகாரிகள் வகைப்படுத்தியுள்ளனர். மேலும், மீன்பிடி மற்றும் கடற்படை சமூகத்தினர் விழிப்புடன் இருக்குமாறும், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்கால அறிவிப்புகளைப் பின்பற்றுமாறும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.








