கற்பிட்டி – பாலவிய பிரதான வீதியில் சேதாபொல பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதுடன் ஒரு இளைஞன் படுகாயமடைந்துள்ளதாக நுரைச்சோலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்து நேற்று வெள்ளிக்கிழமை (13.12.2024) இரவு 07.00 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
நுரைச்சோலையிலிருந்து முந்தல் நோக்கிப் பயணித்த லொறி ஒன்று பாலவியவிலிருந்து நுரைச்சோலை நோக்கிப் பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்றுடன் நேருக்கு நேர் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த மூன்று இளைஞர்கள் படுகாயமடைந்துள்ள நிலையில் புத்தளம் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளம், மாம்புரி மற்றும் தழுவ ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 28 மற்றும் 29 வயதுடைய இரு இளைஞர்களே உயிரிழந்துள்ளனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை நுரைச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.








