சுமார் 5 மாதங்களாக காணாமல் போயிருந்த 15 வயது சிறுமி, தனது 2 மாத குழந்தையுடன் நக்கிள்ஸ் மலைத்தொடரில் உள்ள ஒதுக்குப்புறமான குகை ஒன்றில் வாழ்ந்து வந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உடுதும்பர பொலிஸார் மேற்கொண்ட விசாரணையை அடுத்து, மீமுரே அருகே உள்ள வனப்பகுதியில் அந்த சிறுமி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
சுமார் 5 மாதங்களுக்கு முன்பு சிறுமி காணாமல் போனதாக அவரது குடும்பத்தினர் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்து பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்தனர்.
விசாரணையின் போது, உள்ளூர் கடை ஒன்றில் வழக்கத்துக்கு மாறாக அதிக அளவில் அரிசி மற்றும் உணவுப் பொருட்களை கொள்வனவு செய்து வந்த இளைஞர் ஒருவர் மீது பொலிஸாருக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
அந்த இளைஞரை பின்தொடர்ந்த பொலிஸார், மக்கள் வசிக்காத ஒதுக்குப்புறமான வனப்பகுதிக்குச் சென்றுள்ளனர். அங்கு பிளாஸ்டிக் தாள்களால் மூடப்பட்ட குகை ஒன்றை கண்டுபிடித்துள்ளனர்.
அந்த குகைக்குள், காணாமல் போன 15 வயது சிறுமியும், அவரது 2 மாத பெண் குழந்தையும் இருந்துள்ளனர்.
சிறுமி அந்த குகைக்குள்ளேயே மருத்துவ உதவி இன்றி குழந்தையை பெற்றெடுத்ததாக விசாரணையில் தெரியவந்துள்ளது.
கித்துள் தொழிலில் பயன்படுத்தப்படும் கூர்மையான கருவி ஒன்றைக் கொண்டு குழந்தையின் தொப்புள் கொடி வெட்டப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தாயும், குழந்தையும் சுற்றியுள்ள காட்டில் இருந்து சேகரிக்கப்பட்ட பாரம்பரிய மூலிகை மருந்துகளைக் கொண்டு கவனிக்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது.
குழந்தையின் தந்தை என நம்பப்படும் 23 வயதான இளைஞன், கித்துள் பாணி தயாரிக்க பயன்படுத்தப்படும் பெரிய பாத்திரத்தை கொண்டு குழந்தையை குளிப்பாட்டியதாக பொலிஸாரிடம் கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அந்த 23 வயது இளைஞனும், அவருக்கு உதவியதாக கூறப்படும் உறவினர் ஒருவரும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இரு சந்தேக நபர்களும் தெல்தெனிய நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, நவம்பர் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
சிறுமியும், குழந்தையும் பொலிஸ் பாதுகாப்பில் எடுக்கப்பட்டு, மருத்துவ பரிசோதனை மற்றும் சிகிச்சைக்காக கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பில் உடுதும்பர பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.








