நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவுக்கு எதிரான வழக்கில் இரு சாட்சிகளுக்கு விடுக்கப்பட்ட அழைப்பாணைகள் முறையாக வழங்கப்பட்டதா என்பது குறித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு (CID) கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (16) உத்தரவிட்டுள்ளது.

இலங்கையில் ரக்பி விளையாட்டை மேம்படுத்துவதற்காக இந்திய நிறுவனமான கிரிஷ் நிறுவனத்திடமிருந்து பெற்ற 70 மில்லியன் ரூபாவை குற்றவியல் ரீதியாக தவறாகப் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில் ராஜபக்ஷவுக்கு எதிராக இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

முதல் மற்றும் இரண்டாவது அரச தரப்பு சாட்சிகளுக்கு அழைப்பாணைகள் கிடைத்ததா என்பது குறித்து இந்திய உயர் ஸ்தானிகராலயத்திடம் விசாரித்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் குற்ற புலனாய்வு பிரிவிற்கு பணித்துள்ளது.

பிரதி சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா விடுத்த கோரிக்கையை பரிசீலித்த பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி நாடி அபர்ணா சுவந்துருகொட இந்த உத்தரவை பிறப்பித்தார்.

இரு சாட்சிகளும் தற்போது வெளிநாட்டில் இருப்பதாகவும், வெளிநாட்டு அமைச்சு ஊடாக அழைப்பாணைகள் அனுப்பப்பட்டுள்ளதாகவும் பிரதி சொலிசிட்டர் ஜெனரல் நீதிமன்றத்திற்கு தெரிவித்தார். எனினும், அந்த ஆவணங்கள் முறையாக வழங்கப்பட்டதா என்பது குறித்து உறுதிப்படுத்தல் கிடைக்கவில்லை என்றும் அவர் கூறினார்.

வழக்கை ஜனவரி 18 ஆம் திகதி மீண்டும் எடுத்துக் கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. குறித்த திகதியில் ராஜபக்ஷ விளக்கமறியலில் இருந்தால் அவரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு சிறைச்சாலை அத்தியட்சகருக்கும் பணித்துள்ளது.

ராஜபக்ஷ இன்று சிறைச்சாலை அதிகாரிகளால் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here