சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ICC) இயக்குநர் சபையால் எதிர்ப்பின்றி பரிந்துரைக்கப்பட்டதை அடுத்து, ஜெய் ஷா இரண்டாவது முறையாக ஐ.சி.சிதலைவராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற ஐ சி.சி இயக்குநர் சபை மற்றும் குழு கூட்டங்களைத் தொடர்ந்து இந்த தீர்மானம் உறுதிப்படுத்தப்பட்டது.

ஷாவின் தலைமைத்துவத்தில் இயக்குநர் சபை கொண்டுள்ள நம்பிக்கையை இந்த நியமனம் பிரதிபலிப்பதாகவும், கிரிக்கெட்டின் உலகளாவிய விரிவாக்கம், ரசிகர்களின் எண்ணிக்கையை அதிகரித்தல் மற்றும் வணிக வளர்ச்சி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் நிலையில் தொடர்ச்சியை உறுதி செய்வதாகவும் ஐ சி சி தெரிவித்தது.

இதேவேளை தனது நியமனம் குறித்து கருத்து தெரிவித்த ஷா, தொடர்ந்து நம்பிக்கை வைத்தமைக்காக ஐ.சி.சி இயக்குநர் சபைக்கு நன்றி தெரிவித்தார்.

“இந்த சபை என் மீது வைத்துள்ள நம்பிக்கைக்கு நான் மிகவும் பெருமைப்படுகிறேன். தொடர்ந்து நம்பிக்கை வைத்து ஆதரவளித்த ஒவ்வொரு இயக்குநருக்கும் மனப்பூர்வமாக நன்றி கூறுகிறேன்” என்று ஷா கூறினார்.

2028 ஆம் ஆண்டு லொஸ் ஏஞ்சல்ஸில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் மீண்டும் இடம்பெறுவது, புதிய பார்வையாளர்களை ஈர்ப்பதற்கும், எதிர்கால சந்ததியினருக்கு ஊக்கமளிப்பதற்கும் ஒரு பெரிய வாய்ப்பாகும் என அவர் சுட்டிக்காட்டினார்.

கிரிக்கெட்டின் நீண்டகால நிலைத்தன்மையை வலுப்படுத்துதல், வீரர்கள் மற்றும் ரசிகர்களுக்கு ஆதரவளித்தல், மற்றும் விளையாட்டின் உலகளாவிய வீச்சை விரிவுபடுத்துதல் ஆகியவை தனது முன்னுரிமைகளாக இருக்கும் என ஷா கூறினார்.

அமைப்பின் இலட்சியங்களை அர்த்தமுள்ள முன்னேற்றமாக மாற்றுவதற்கும், விளையாட்டுக்கு நிலையான பாரம்பரியத்தை விட்டுச் செல்வதற்கும் ஐ.சி.சி உறுப்பினர்களுடன் நெருக்கமாக பணியாற்றுவதாகவும் அவர் உறுதியளித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here