கடுவலையில், போத்தல்களில் அடைக்கப்பட்ட குடிநீர் வியாபாரம் என தெரிவித்து கள்ளச்சாராயம் தயாரித்து வந்த நிறுவனம் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது.
பொலிஸாரின் சோதனை நடவடிக்கையின் போது, 18,500-க்கும் மேற்பட்ட கள்ளச்சாராயப் போத்தல்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு ஆறு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிடைத்த தகவலின் அடிப்படையில், மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவைச் சேர்ந்த அதிகாரிகள், சனிக்கிழமையன்று கடுவலை சுதர்சன வீதியில் அமைந்துள்ள ஒரு இடத்தில் இந்தச் சோதனையை நடத்தியுள்ளனர்.
இதன்போது குறித்த குடிநீர் வியாபார வளாகம், கள்ளச்சாராயம் தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்டு வந்தமை தெரியவந்துள்ளது.
உள்ளூரில் தயாரிக்கப்பட்ட 18,575 போத்தல்கள் (ஒவ்வொன்றும் 180 மிலி) என மொத்தம் 3,345.5 லீட்டர் மதுபானமும், வெளிநாட்டு மது என முத்திரையிடப்பட்ட நான்கு ஒரு லிட்டர் போத்தல்கள் மற்றும் ஒரு 750 மிலி போத்தல்களையும் அதிகாரிகள் மீட்டெடுத்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் மது தயாரிப்பு உபகரணங்கள், மற்றும் 50 கிராம் மற்றும் 200 மில்லிகிராம் கேரள கஞ்சா அடங்கிய போதைப்பொருட்களையும் பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
இதேநேரம் கைது செய்யப்பட்ட 30, 43, 58, 59 மற்றும் 62 வயதுடைய ஆறு சந்தேகநபர்களும் மிஹிந்தலை, மருதானை, வத்தளை, வெபட தெற்கு, கெத்தலாவ மற்றும் சிப்பிக்குளம ஆகிய பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு மாகாண வடக்கு குற்றப்பிரிவினரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.








