குளியாப்பிட்டிய விலபொல சந்தியில் இடம்பெற்ற கொடூர விபத்தில் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக டிப்பர் வாகன சாரதி கைது செய்யப்பட்டு, செப்டம்பர் 8ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
நேற்று (27) காலை பல்லேவெல பாலம் அருகே டிப்பர் வாகனமும் பாடசாலை வேனும் மோதியதில் இரண்டு பாடசாலை மாணவிகள் உட்பட மூவர் உயிரிழந்ததுடன், மேலும் 13 மாணவர்கள் காயமடைந்தனர்.
சம்பவத்தையடுத்து, டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டு குளியாப்பிட்டி நீதவான் ரந்திக லக்மல் ஜயலத் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார்.
விசாரணையின் போது, குறித்த சாரதி 24 மணி நேரத்துக்கும் மேலாக தூக்கமின்றி வாகனம் ஓட்டியிருந்தது தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதனால் விபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும், எதிர்காலத்தில் அந்த டிப்பர் வாகன உரிமையாளருக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என நீதிமன்றத்தில் அறிவிக்கப்பட்டது.








