ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பிரதான செயலாளராக தன்னை ஏற்றுக்கொள்ளுமாறு தயாசிறி ஜயசேகர முன்வைத்த கோரிக்கையை மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (28) நிராகரித்துள்ளது.
தயாசிறி ஜயசேகர கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த வழக்கில், தன்னை கட்சியின் செயலாளராக ஏற்றுக்கொள்ளுமாறும், துமிந்த திசாநாயக்க செயலாளர் பதவியில் செயல்படுவதையும், நிமல் சிறிபால டி சில்வா தலைவர் பதவியை வகிப்பதையும் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவு பிறப்பிக்குமாறும் கோரியிருந்தார்.
குறித்த கோரிக்கையை கொழும்பு மாவட்ட நீதிமன்றமும் ஏற்கனவே நிராகரித்திருந்தது, அந்த உத்தரவை நிராகரித்து தான் கோரும் நிவாரணத்தை வழங்குமாறு கோரி தயாசிறி ஜயசேகர மேல் மாகாண சிவில் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.
இன்று அந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, நிமல் சிறிபால டி சில்வா தலைவர் பதவியை வகிப்பதையும், துமிந்த திசாநாயக்க செயலாளர் பதவியில் செயல்படுவதையும் தடுக்கும் இடைக்கால தடை உத்தரவை பிறப்பிப்பதையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
இதற்கிடையில், குறித்த வழக்கின் ஆரம்ப விசாரணை 2027 ஜனவரி 08 ஆம் திகதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.







