கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் மின்சார கம்பிகள், செம்பு கம்பிகள் மற்றும் மின் விளக்கு கம்பங்கள் உள்ளிட்ட உபகரணங்கள் திருடப்பட்ட பல சம்பவங்கள் பதிவாகியுள்ளதாக 2024 ஆம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கையில் தெரியவந்துள்ளது.
குறித்த அறிக்கைக்கமைய, 2021, 2022 மற்றும் 2023 ஆகிய மூன்று ஆண்டுகளில் அதிவேக நெடுஞ்சாலையில் 100 திருட்டு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
அவற்றில் 11 சம்பவங்கள் மூலமாக 580 மில்லியன் ரூபாய் இழப்பு கணக்கிடப்பட்டிருந்தாலும், ஏனைய 89 திருட்டு சம்பவங்களின் காரணமாக ஏற்பட்ட இழப்பு கண்டறியப்படவில்லை என்று தணிக்கை அறிக்கை குறிப்பிடுகிறது.
நெடுஞ்சாலையின் மின் கம்பி அமைப்பை வடிவமைக்கும்போது, நடுத் தடுப்பில் இணைக்கப்பட்ட மின் கம்பிகள் முழுமையான கொங்கிரீட் பாதுகாப்பின்றி, சுமார் 3 அடி அரை வட்ட விட்டம் கொண்ட ஹியூம் குழாய்கள் மூலம் பகுதியளவு மட்டுமே மூடப்பட்டிருந்தமையும் தெரியவந்துள்ளது.
அதன் காரணமாக மின் கம்பிகளை மிக எளிதாக வெட்டி அகற்றக்கூடிய நிலை இருந்தமை கள ஆய்வின் போது அவதானிக்கப்பட்டுள்ளது.
முதல் திருட்டு பதிவான 2021 ஆம் ஆண்டிலிருந்து பொருத்தமான பாதுகாப்பு முறை அறிமுகப்படுத்தப்படாமை பொறுப்பான மேற்பார்வை அதிகாரிகள் தேவையான நடவடிக்கைகளை எடுக்க தவறியமை காரணமாக திருட்டுகள் தொடர்ந்து அதிகரித்துள்ளதாகவும் தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
மேலும், அதிவேக நெடுஞ்சாலையின் முதல் 10 கிலோமீட்டருக்கு செய்யப்பட்ட மதிப்பீட்டுடன் ஒப்பிடும்போது, முழு சாலையின் சேதத்தை சரிசெய்ய ஆகும் செலவு 1,770 மில்லியன் ரூபாய்க்கும் அதிகம் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எனினும், இந்த திருட்டுகள் மற்றும் சேதங்களுக்கு பொறுப்பான நபர்களை அடையாளம் கண்டு போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை என்றும் தணிக்கை அறிக்கை மேலும் வெளிப்படுத்துகிறது.








