இந்தியாவின் அதானி குழுமம் கொழும்பு துறைமுகத்தின் மேற்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்வதை ஆரம்பிப்பது முக்கியமானது என துறைமுக அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் கொழும்பு துறைமுகத்திற்கு விஜயம் செய்த போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் ரத்நாயக்க, மன்னாரில் அதானி குழுமத்தின் காற்றாலை மின்சார திட்டம் இலங்கைக்கு சாத்தியமற்றது என்பதனால் மாத்திரமே ஆட்சேபனைகள் முன்வைக்கப்பட்டதாக தெரிவித்தார்.
மேலும் துறைமுகத் திட்டம் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அமைச்சர் ரத்நாயக்க, நிதி வழங்குவது தொடர்பில் பிரச்சினை எழுந்துள்ளதாகவும், ஆனால் அதானி குழுமத்திற்கும் நிதியை வழங்க இணங்கிய அமெரிக்க நிறுவனத்திற்கும் இடையில் பிரச்சினை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
எவ்வாறாயினும், அதானி குழுமம் ஏற்கனவே இந்த விடயத்தை எடுத்துரைத்துள்ளதாகவும், கொழும்பு துறைமுக திட்டத்திற்கு உள்நாட்டில் நிதி வழங்கப்படுமெனவும் அமைச்சர் ரத்நாயக்க தெரிவித்தார்.
அதானி குழுமம் விரைவில் கொழும்பு துறைமுகத்தில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்க வேண்டியது மிகவும் அவசியமானது என துறைமுகங்கள் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
ஒரு நாட்டின் மிகப் பெரிய தொழில்துறையாகவும், சர்வதேச வணிகமாகவும் இருப்பதால், அந்த நாட்டின் துறைமுகங்களை மேம்படுத்துவது இன்றியமையாதது என்றும் அவர் கூறினார்








