சிவனொளிபாதமலைக்கு பயணித்த குழுவினர் பயணித்த கார் நல்லதண்ணி – மஸ்கெலியா பிரதான வீதியில் இருந்து விலகி மொஹினி அருவிக்கு அருகில் உள்ள கால்வாய்க்குள் விழுந்ததில் விபத்தொன்று பதிவாகியுள்ளது.

வவுனியா மற்றும் கிளிநொச்சியைச் சேர்ந்தவர்களைக் கொண்ட இந்த குழுவினர் நேற்று (19) இரவு 11.00 மணியளவில் நல்லதண்ணி பொலிஸ் நிலையத்தில் சிவனொளி பாதமலை செல்லவுள்ளதாக பொலிஸாருக்கு அறிவித்தனர்.

நிலவும் மோசமான வானிலை காரணமாக இரவு நேரத்தில் பயணிக்க வேண்டாம் என்றும் காலைவேளையில் செல்லுமாறும் பொலிஸ் அதிகாரிகள் அந்த குழுவினருக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

எனினும், தங்குமிடம் தேடி குழுவினர் காரில் திரும்பிக் கொண்டிருந்தபோது, நள்ளிரவு நேரத்தில் மொஹினி அருவி பகுதியில் வாகனம் வீதியில் இருந்து வழுக்கி கால்வாய்க்குள் விழுந்ததாக கூறப்படுகிறது.

குறித்த வாகனத்தில் மூன்று ஆண்களும் இரண்டு பெண்களும் பயணித்தனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாகனத்திற்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்த போதிலும், ஐவரும் காயமின்றி தப்பினர் என கூறப்படுகிறது.

இந்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை நல்லதண்ணி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here