அமெரிக்காவின் புதிய தீர்வை வரி உள்ளிட்ட நாட்டுக்கு ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பில் கலந்துரையாடி தீர்வைக் கண்டறிவதற்காக சர்வகட்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுக்குமாறு சர்வசன அதிகாரத்தின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான திலித் ஜயவீர கோரிக்கை விடுத்துள்ளார்.
அம்பாறையில் நேற்று (07/04/2025) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைக் குறிப்பிட்ட அவர், தொடர்ந்து கருத்துத் தெரிவிக்கையில்,
‘‘இந்தியப் பிரதமரின் இராஜதந்திர விஜயத்தில் ஏதாவதொன்றைக் கற்றுக்கொள்ள வேண்டுமென்றால் எம்மைப் போன்று 70 வருடங்களுக்கு மேல் வறுமையில் இருந்த இந்தியாவை அவர் எவ்வாறு தொழில்முனைவோர் கொள்கையைப் பின்பற்றிக் கட்டியெழுப்பினார் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அந்த நாட்டில் நடுத்தர வர்க்கத்தினர் 300 மில்லியனுக்கும் அதிகமானவர்கள் இருக்கிறார்கள். அமெரிக்காவின் முழு சனத்தொகையிலும் இந்திய நடுத்தர வர்க்க மக்களின் எண்ணிக்கை அதிகமாகும்.
எனவே, சகல பகுதிகளிலுமிருந்து எமக்கு வந்த அனைத்து சவால்கள்மீதும் கவனஞ்செலுத்தியும் அமெரிக்காவால் விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரி மற்றும் பூகோள அரசியலில் எமது நாடு சந்தித்துள்ள இக்கட்டான சூழ்நிலையைக் கருத்திற்கொண்டும் உடனடியாக சர்வகட்சி மாநாடொன்றுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுக்க வேண்டும். அந்த மாநாட்டினூடாக தவறுகளைச் சரி செய்வதற்கான பங்களிப்பை வழங்குவதற்கு எங்களுக்கும் வாய்ப்பு வழங்கவேண்டும். நாங்கள் இந்த நாட்டை நேசிக்கும் மக்களாவோம். எங்களின் கோரிக்கையை செவிமடுக்க வேண்டும். அப்போது தான் அரசியல் செய்வதற்காகவாவது இந்த நாடு மிச்சப்படும். சர்வசன அதிகாரம் என்ற அடிப்படையில் இந்த அரசாங்கம் ஏதாவது சந்தர்ப்பத்தில் உதவி கோருமாக இருந்தால் அந்த உதவியைப் பெற்றுக்கொடுக்க விருப்பத்துடன் இருக்கிறோம்’’ என்றார்.








