சவுதி அரேபியாவின் கிழக்கு நகரமான தம்மாமில் உள்ள கிங் பஹத் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் எட்டு பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.
காயமடைந்த அனைவரும், சிறு காயங்கள் முதல் ஆபத்தான நிலை வரை காயமடைந்துள்ளதாகவும், மருத்துவ சிகிச்சை பெறுவதற்காக மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்டதாகவும் பொது சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் (GACA) நேற்று புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, சவுதி அராம்கோவின் ஷைபா எண்ணெய் வயலில் உள்ள ஒரு வசதியை தாக்க முயன்ற ட்ரோன் ஒன்றை சவுதி வான் பாதுகாப்பு படைகள் இடைமறித்த பின்னர் இருவர் உயிரிழந்ததாக எரிசக்தி அமைச்சு தெரிவித்தது.
ஹவுதி படைகளுக்கும் சவுதி ஆதரவு பெற்ற சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட யேமன் அரசாங்கத்திற்கும் இடையிலான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில், சவுதி விமான நிலையங்கள் மீதான தொடர் தாக்குதல்களில் இது சமீபத்தியதாகும்.
கடந்த வாரம், அக்டோபர் 11 அன்று ரியாத்தில் உள்ள கிங் காலித் சர்வதேச விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட எறிகணை தாக்குதலில் ஒருவர் உயிரிழந்ததுடன் 11 பேர் காயமடைந்ததாக அந்நாடு தெரிவித்திருந்தது. அக்டோபர் 10 அன்று, அதே விமான நிலையத்தின் மீது நடத்தப்பட்ட மற்றொரு தாக்குதலில் 12 பேர் உயிரிழந்ததுடன் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்திருந்தது.
ஹவுதி தாக்குதல்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், சவுதி அரேபியாவில் உள்ள தனது தூதரகங்களில் இருந்து ராஜதந்திரிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை வெளியேறுமாறு நேற்று அமெரிக்க வெளியுறவுத் துறை உத்தரவிட்டது. பிராந்தியத்தில் உள்ள ஏனைய அமெரிக்க தூதரகங்களில் இருந்தும் குடும்பத்தினரை திரும்பப் பெறுவதற்கான திட்டங்களும் உள்ளதாக அமெரிக்க அதிகாரிகள் ரொய்ட்டர்ஸிடம் தெரிவித்தனர்.
ரியாத்தில் உள்ள அமெரிக்க தூதரகம் புதன்கிழமை, சவுதி அரேபியா மீது ஹவுதிகள் மேலும் தாக்குதல் நடத்தக்கூடும் என்பது குறித்து பாதுகாப்பு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.







