இலங்கை அரசாங்கம் மோட்டார் வாகன போக்குவரத்துச் சட்டத்தின் கீழ் புதிய விதிமுறைகளை வெளியிட்டு, இலங்கை குடிமக்கள் மற்றும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான சாரதி அனுமதிப்பத்திரக் கட்டணங்களை திருத்தியுள்ளது.
2025 நவம்பர் 17 ஆம் திகதி வெளியிடப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தல் இல. 2463/04 மூலம் இக்கட்டண மாற்றங்கள் அமுலுக்கு வந்துள்ளன.
அதன்படி, ஏற்கனவே வெளிநாட்டு சாரதி அனுமதிப்பத்திரத்தை பெற்றுள்ள இலங்கை குடிமக்கள், அதை இலங்கைக்கு மாற்றுவதற்கான கட்டணம் ரூ. 30,000 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதே சேவைக்கான வெளிநாட்டுப் பிரஜைகளின் கட்டணம் ரூ. 60,000 ஆகும்.
மேலும், வெளிநாட்டவர்களுக்கு புதிய சாரதி அனுமதிப்பத்திரம் வழங்குவது ரூ. 45,000 என்றும், அதனை புதுப்பித்தல் அல்லது மீள வழங்குதல் ரூ. 15,000 என்றும் திருத்தப்பட்டுள்ளது.
அத்துடன், இலங்கை வருகை வரும் விருந்தினர்களுக்கான தற்காலிக சாரதி அனுமதிப்பத்திரங்களின் கட்டணங்களும், அவற்றின் காலவரையறைக்கு ஏற்ப இலங்கை குடிமக்கள் மற்றும் வெளிநாட்டவர்கள் இருவருக்கும் புதிதாக மாற்றப்பட்டுள்ளன.








