நீர்கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மை குறித்து எந்தவிதமான முன் கூட்டிய உளவுத் தகவலும் கிடைக்கப்பெறவில்லை என சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

கைதிகளின் இடையூறுகளைத் தடுக்க அதிகாரிகள் முயன்றதாகவும், பாதிப்பின் அளவைக் குறைக்க அவர்கள் போராடியதாகவும் அவர் மேலும் கூறினார்.

இன்று (07) நடைபெற்ற அமைச்சரவை சந்திப்புக்கு பின்னரான ஊடகவியலாளர் சந்திப்பில் பேசிய அவர், வன்முறை ஏற்பட்ட அன்று (05) மாலைக்குள் நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, கைதிகள் மீண்டும் சிறைச்சாலைக்கு  அனுப்பப்பட்டு, உணவு வழங்கப்பட்டதாக விளக்கினார்.

எனினும், மறுநாள் காலையில் (06), கைதிகள் போதைப்பொருள் உட்கொண்டமை கண்டறியப்பட்டதோடு இது  மோதல்களுக்கு வழிவகுத்தமை தெரியவந்துள்ளது என குறிப்பிட்டார்.

கைதிகள் போதைப்பொருள் பயன்பாட்டால் மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தபோதிலும், நிலைமையை கட்டுப்படுத்த அதிகாரிகள் தங்கள் உயிரைப் பணையம் வைத்தனர் என்று அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை குறித்த ஊடக சந்திப்பில் உரையாற்றிய அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ, இந்த சம்பவம் குறித்து ஏற்கனவே விசாரணைகள் நடைபெற்று வருவதை உறுதிப்படுத்தினார்.

விசாரணைக்காக ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரி மற்றும் சிரேஷ்ட சட்டத்தரணி ஆகிய மூவர் கொண்ட குழு நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், நீர்கொழும்பு பொலிஸார், கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு, குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களம் ஆகியவற்றால் தனித்தனியாக விசாரணைகள் நடத்தப்படுகின்றன.

“அனைத்து அறிக்கைகளும் சமர்ப்பிக்கப்பட்டவுடன் சம்பவத்தின் முழு உண்மைத்தன்மையும் வெளிப்படுத்தப்படும்” என்று அமைச்சர் மேலும் கூறினார்,

அத்துடன் வன்முறை தொடர்பான பொறுப்புக்கூறலுக்கான அரசாங்கத்தின் அர்ப்பணிப்பையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here