சிறைச்சாலைகளில் இடம்பெற்று வரும் அமைதிக்கேடுகளை வன்மையாகக் கண்டிப்பதாகவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு முழுமையான ஆதரவு வழங்குவதாகவும் புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் முன்னாள், கொழும்பு மாநகர சபை உறுப்பினர் நடராசா ரவிகுமார் தெரிவித்துள்ளார்.

சிறைச்சாலைகளில் அடுத்தடுத்து கலவர சம்பவங்கள் பதிவான நிலையில் அவர் தனது கட்சியின் நிலைப்பாட்டை அறிக்கை ஒன்றின் ஊடாக வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் குறித்த அறிக்கையில் மேலும் தெரிவித்திருப்பதாவது,

நீர்கொழும்பு மற்றும் மஹர சிறைச்சாலைகளில் அண்மையில் திட்டமிட்ட வகையில் இடம்பெற்ற கலகங்கள் நாட்டின் சட்டம், ஒழுங்கு மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் கடுமையான கவலையை ஏற்படுத்துகின்றன.

இந்த சம்பவங்கள் சாதாரண நிர்வாகச் சிக்கல்களின் விளைவாக அன்றி, நாட்டில் நிலவி வரும் அரசியல் மற்றும் சமூக ஸ்திரத்தன்மையை சீர்குலைக்கும் நோக்கில், மக்களின் ஜனநாயகத் தீர்ப்பை ஏற்க மறுக்கும் சில பின்னடைவு அரசியல் சக்திகளாலும், தோல்வியடைந்த எதிர்க்கட்சிகளுடன் தொடர்புடைய குழுக்களாலும் மறைமுகமாகத் தூண்டப்பட்டு முன்னெடுக்கப்படுகின்றன என்ற குற்றச்சாட்டுகள் வெளிவருகின்றன.

இவ்வாறான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உரிய அதிகாரிகள் முழுமையான, சுயாதீனமான மற்றும் வெளிப்படையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

சிறைச்சாலைகள் சட்டத்தின் ஆட்சிக்குட்பட்ட நிறுவனங்களாகும். அங்கு குழப்பநிலைகளை உருவாக்குவதன் மூலம் அரசாங்கத்தின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தவும். பொதுமக்கள் மத்தியில் அச்சத்தையும் நம்பிக்கையின்மையையும் உருவாக்கவும் எடுக்கப்படும் எந்தவொரு முயற்சியும் ஜனநாயகத்திற்கு எதிரான செயலாகும்.

மக்களின் தெளிவான ஆணையின் அடிப்படையில் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுள்ள தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஊழல் ஒழிப்பு, நல்லாட்சியை நிலைநாட்டல், சட்டத்தின் ஆட்சியை வலுப்படுத்தல் மற்றும் நாட்டை பொருளாதார ரீதியாக மீட்டெடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. இந்நிலையில், நாட்டை மீண்டும் குழப்பநிலைக்குத் தள்ளும் எந்தவொரு சதித் திட்டத்திற்கும் மக்கள் இடமளிக்கக் கூடாது.

புதிய ஜனநாயக மக்கள் முன்னணியின் சார்பில், இலங்கையின் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு எமது முழுமையான ஒத்துழைப்பையும் உறுதியான ஆதரவையும் மீண்டும் ஒருமுறை தெரிவித்துக் கொள்கின்றோம்.

அதேவேளை, சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாக்கும் அனைத்து அரச நிறுவனங்களும் அரசியல் அழுத்தங்களுக்கு இடமளிக்காமல், சட்டத்தின் அடிப்படையில் தங்களது கடமைகளை சுயாதீனமாகவும் நேர்மையாகவும் நிறைவேற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.

நாட்டின் அமைதி, நல்லிணக்கம் மற்றும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பது ஒவ்வொரு குடிமகனின் பொறுப்பாகும். எனவே, வதந்திகள், பொய்யான தகவல்கள் மற்றும் அரசியல் நோக்கத்துடன் பரப்பப்படும் பிரச்சாரங்களுக்கு ஏமாறாமல், நாட்டின் எதிர்காலத்தை பாதுகாக்க அனைவரும் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கொன்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here