வட சீனாவில் உள்ள ஒரு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் குறைந்தது 82 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் ஒன்பது பேரைக் காணவில்லை என்றும் அந்நாட்டின் அரச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“ஷான்சி மாகாணத்தில் உள்ள டோங்ஜோ குழுமத்தின் லியுஷென்யு நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட எரிவாயு வெடிவிபத்திலேயே இவ்வாறு 82 பேர் உயிரிழந்துள்ளனர் என தெரியவந்துள்ளது.
இந்த வெடிவிபத்து, உள்ளூர் நேரப்படி வெள்ளிக்கிழமை இரவு 7:29 மணிக்கு (ஜிஎம்டி 11:29) இந்த சம்பவம் நேர்ந்ததாக அரச செய்தி நிறுவனமான சின்ஹுவா தெரிவித்துள்ளது. சம்பவம் நடந்த நேரத்தில் 247 தொழிலாளர்கள் பணியில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
சம்பவ இடத்தில் தற்போது மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதிலும், உயிர் பிழைத்தவர்களைத் தேடுவதிலும் முழுமையான அக்கறை எடுக்குமாறு சீன அதிபர் ஷி ஜின்பிங் அழைப்பு விடுத்தார்.
மேலும், விபத்துக்கான காரணத்தை விசாரித்து, பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அவர் அரசாங்கத்தைக் கேட்டுக்கொண்டார்.
தற்போது நிலக்கரிச் சுரங்கத்தை நடத்தி வந்த அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளதாக அரச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிவாயு வெடிவிபத்துக்கான காரணம் இன்னும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.








