அண்மையில் பெய்த கனமழையால் விவசாயிகளின் பயிர்களுக்கு ஏற்பட்ட சேதத்தை மதிப்பிட்டு அதற்கேற்ப ஒரு ஹெக்டேயருக்கு அதிகபட்சமாக ஒரு லட்சம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கப்படும் என கமத்தொழில் அமைச்சு அறிவித்துள்ளது.
நெல்,சோளம், உருளைக்கிழங்கு, சோயா, மிளகாய் மற்றும் பெரிய வெங்காயம் ஆகியவற்றை பயிர் செய்தவர்களுக்கு இந்த இழப்பீடு வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
இதற்கமைய, பயிர் சேதமடைந்த விபரங்களை எதிர்வரும் 14 நாட்களுக்குள் சம்பந்தப்பட்ட விவசாய சேவை மத்திய நிலையங்களில் பராமரிக்கப்படும் சேத அறிவிப்புப் பதிவேட்டில் பதிவிடவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக விவசாயிகளிடமிருந்து எந்த காப்பீட்டு தொகையும் பெறப்படாது என்றும் அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த வாரங்களில் நிலவிய சீரற்ற வானிலை காரணமாக பெய்த கனமழையால், சில மாவட்டங்களில் பயிர்ச்செய்கை நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன, இதன் காரணமாக விவசாயிகள் பலரும் கடும் இழப்பை சந்தித்ததுள்ளனர்.
இந்த நிலையில் இந்த இழப்பீட்டு தொகை தொடர்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘நாட்டின் விவசாய சமூகத்திற்குப் பொருளாதார நிலைத்தன்மையை ஏற்படுத்துவது தற்போதைய அரசாங்கத்தின் முக்கிய நோக்கமாகும். எனவே, விவசாய சமூகத்தைத் தொடர்ந்து கண்காணித்து, அவர்களுக்கு அதிகபட்சப் பலன்களை வழங்குமாறு கமத்தொழில், கால்நடை வளர்ப்பு, காணி மற்றும் நீர்ப்பாசனத் துறை அமைச்சர், கமத்தொழில் மற்றும் விவசாயிகள் காப்பீட்டு சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.








