செம்மணி மனிதப் புதைகுழிக்குப் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால் சாட்சியங்கள் அழிக்கப்பட்டு, அநீதிகள் நடக்கக்கூடும் என நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
2025ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் நீதியமைச்சுக்கான ஒதுக்கீடுகள் தொடர்பான குழு நிலை விவாதத்தில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் கொடிக்குத்தொடுவாய் மற்றும் மன்னாரில் பாலத்துக்கு அருகில் உள்ள சதொச கட்டிட தொகுதியில் மனிதப்புதைகுழி கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்போது இரண்டு வாரங்களுக்கு முன்னர் யாழ். செம்மணியில் மனித எச்சங்கள் காணப்படுகின்றன.
அதனை நான் நேரில் சென்று பார்த்தேன்.
நான் அங்கு சென்று பார்த்தபோது காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையையும் மேற்கொண்டிருக்கவில்லை.
நீதிமன்றுக்குத் தெரிவிக்கப்படவுமில்லை.
எங்கள் கட்சி உறுப்பினர்களில் ஒருவர் மயானத்தை நிர்வகிக்கும் குழுவிலும் உள்ளார்.
அவரிடம் காவல்துறையினரிடம் முறைப்பாடு செய்யுமாறு கூறினேன்.
அதன்பிறகு நீதிபதிகள் தலையிட்டனர்.
மேலும் இந்த விவகாரம் தொடர்பில் ஆராயப்பட்டு வருகிறது.
ஆனால் இங்கே புதைகுழிகள் தொடர்பில் எந்த நெறிமுறையும் கடைப்பிடிக்கப்படுவதில்லை.
என் அறிவுக்கு எட்டியவரைத் தெளிவான நெறிமுறை பின்பற்றப்படுவதில்லை.
இதற்கு நிதிப்பற்றாக்குறை காரணம் காட்டப்படுகிறது.
இந்த விடயங்களை உடனடியாக கவனிக்க வேண்டும்.
மன்னார், கொடிக்குத்தொடுவாய் ஆகிய இரண்டு இடங்களிலும் இழுபறி நிலையே காணப்படுகிறது.
இதனால் யாழ்ப்பாணத்தில் செம்மணியிலும் ஆதாரங்கள் சிதைக்கப்பட்டு அழிக்கப்படலாம் என்று அஞ்சுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்தார்.
மேலும் குறித்த பகுதிக்குப் பாதுகாப்பு வழங்காமல் இருப்பதால், சாட்சியங்கள் அழிக்கப்பட்டு, அநீதிகள் நடக்கக்கூடும் என அவர் இதன்போது மேலும் குறிப்பிட்டார்.








