நீர்கொழும்பு, மஹர, மெகசின், பல்லன்சேன மற்றும் குருவிட்ட ஆகிய 5 சிறைச்சாலைகளில் கடந்த நாட்களில் இடம்பெற்ற அமைதியின்மையால் , ஏற்பட்ட சொத்து சேதம் ரூ. 255 மில்லியனுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த விவரம் நேற்று (10) ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்ற ‘ரட்டம எக்கட்ட’ தேசிய நடவடிக்கை பேரவை கூட்டத்தில் வெளியிடப்பட்டது.

சிறைச்சாலை தொடர்பில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முக்கிய கலந்துரையாடல் மற்றும்  தீர்மானங்கள் குறித்த விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

இதற்கமைய கைதிகளிடையே ஏற்படும் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகள் ஆராயப்பட்டன. சிறை அமைப்புக்குள் உளவியல் சேவைகளை அதிகரிப்பது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டது.

2007 ஆம் ஆண்டின் 54 ஆம் இலக்க புனர்வாழ்வு சட்டத்தின்  திருத்தங்களை விரைவாக மேற்கொள்ளுமாறும், சட்டவரைஞர் திணைக்களத்தில் ஏற்பட்டுள்ள தாமதங்களை குறைக்க அனுபவம் வாய்ந்த ஓய்வு பெற்ற அதிகாரிகளை ஒப்பந்த அடிப்படையில் நியமிக்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டார்.

அத்துடன் பாடசாலை மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனையை தடுக்க கல்வி மற்றும் சுகாதார அமைச்சுகள் இணைந்து செயல்படுத்தும் “மிதுரு பாசல” வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்தும் மீளாய்வு செய்யப்பட்டது.

மாணவர்களின் ஆளுமையை வளர்ப்பதுடன், ஆசிரியர்கள், அதிபர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கு போதைக்கு அடிமையாகும் குழந்தைகளை இனங்கண்டு வழிகாட்டுதல் வழங்குவதற்கான பயிற்சிகளும் அவற்றில் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

போதை அபாயம் மற்றும் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளில் உள்ள பாடசாலைகளில் குறித்த வேலைத்திட்டங்களை நடத்துமாறு ஜனாதிபதி இதன்போது கோரினார்.

சர்வதேச பாடசாலைகளில் பயிலும் மாணவர்களிடையே போதைப்பொருள் பாவனை அதிகரித்துள்ளமை குறித்தும் கவலை வெளியிடப்பட்டது.

பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டியதன் முக்கியத்துவம் வலியுறுத்தப்பட்டது. பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை பரிசோதிக்க மருந்தகங்களில் போதை பரிசோதனை கருவிகள் கிடைக்கின்றன என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இணையம் மற்றும் சமூக ஊடகங்களை போதைப்பொருள் விளம்பரத்திற்கு பயன்படுத்துவது குறித்து ஆராயப்பட்டு, அதே தளங்களை போதை எதிர்ப்பு விழிப்புணர்வுக்கு பயன்படுத்துவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.

இந்த வேலைத்திட்டத்தில் சுகாதாரம், கல்வி, பொது பாதுகாப்பு அமைச்சுகள், தேசிய ஆபத்தான போதைப்பொருள் கட்டுப்பாட்டு சபை, மறுவாழ்வு பணியகம், பொலிஸ், முப்படையினர் உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் இணைந்து செயல்படுகின்றன.

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here