சபரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இடைக்கிடையே மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிக்கிறது.
மேல் மாகாணம் மற்றும் வடமேல் மாகாணங்களில் சில தடவைகள் மழை பெய்யக்கூடும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
அத்துடன் ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், முல்லைத்தீவு மாவட்டத்திலும் சில இடங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என கூறப்படுகிறது.
இதேவேளை நாட்டில் பெய்த மழையின் அளவு குறைந்துள்ளதால், தற்போது எந்த பகுதிக்கும் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இல்லை என நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
அந்தத் திணைக்களத்தின் நீர்வளவியல் மற்றும் அனர்த்த முகாமைத்துவ பணிப்பாளர், பொறியாளர் எல்.எஸ். சூரியபண்டார இன்று (11) காலை குறிப்பிடுகையில்,
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்ச மழையானது களு கங்கை மற்றும் மகாவலி கங்கையின் மேல் நீரேந்து பகுதிகளில் பதிவாகியுள்ளதாக தெரிவித்தார்.
அந்த மழையின் அளவு 20 மில்லிமீட்டருக்கு அருகில் இருந்ததாகவும் அவர் கூறினார்.
நேற்றைய தினம் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும், மேல், வடமேல் மற்றும் சபரகமுவ மாகாணங்களிலும் மழை பெய்த போதிலும், அந்தப் பகுதிகளில் 10 மில்லிமீட்டருக்கும் குறைவான மழையே பதிவாகியுள்ளது.
தீவின் ஏனைய பகுதிகளிலும் 10 மில்லிமீட்டருக்கும் குறைவான மழையே பதிவாகியுள்ளதாக திணைக்களம் சுட்டிக்காட்டுகிறது.
மழை குறைந்ததன் காரணமாக தீவில் உள்ள எந்த நதியிலும் நீர் மட்டம் வேகமாக உயரவில்லை என்றும், வெள்ள அபாய நிலை எதுவும் ஏற்படவில்லை என்றும் அவர் மேலும் உறுதிப்படுத்தினார்.








