கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள தெருவிளக்கு அமைப்பைப் புனரமைப்பதற்காக ரூ. 1.09 பில்லியன் ஒதுக்கும் திட்டத்திற்கு அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

தொடர்ச்சியான நாசகரவேலைகள் மற்றும் செப்புக் கம்பி வடங்கள், பிற மின்சார பாகங்கள் திருடப்பட்டதன் காரணமாக அதிவேக நெடுஞ்சாலையில் உள்ள விளக்கு அமைப்பு கடுமையாகச் சிதைந்துள்ளது. இதன் விளைவாக, அதிவேக நெடுஞ்சாலையின் விளக்கு அமைப்பில் கிட்டத்தட்ட 85 சதவீதம் தற்போது செயலிழந்துள்ளன என அமைச்சரவை ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

குறித்த அதிவேக நெடுஞ்சாலை, கொழும்புக்கும் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கும் இடையிலான பிரதான நெடுஞ்சாலை இணைப்பாகச் செயல்படுவதால், இந்த நிலைமை வீதிப் பாதுகாப்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ளது.

மின் விளக்கு அமைப்பைச் சீரமைப்பதற்கான இந்தத் திட்டத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் சமர்ப்பித்துள்ளார். அனுமதி அளிக்கப்பட்ட திட்டத்திற்கமைய, புனரமைப்பு மற்றும் மேம்படுத்தும் பணிகள் இரண்டு தனித்தனி தொகுப்புகளாக மேற்கொள்ளப்படும்.

இத்திட்டத்தின் மொத்த உத்தேச செலவு ரூ. 1,098.50 மில்லியன் ஆகும். இத்திட்டத்திற்கான ஒப்பந்ததாரர்கள் தேசிய போட்டி ஏல முறை மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அரசாங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here