சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக, 2026 ஜனவரி 1 முதல் நாடு முழுவதும் 628 வெளிநாட்டுப் பிரஜைகளை இலங்கை பொலிஸ் கைது செய்துள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர், உதவி பொலிஸ் மா அதிபர் எஃப். யூ. வூட்லர் தெரிவித்தார்.

நேற்று (05) ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே உதவி பொலிஸ் மா அதிபர் வூட்லர், இதனை தெரிவித்தார்.

குடிவரவு மீறல்கள் முதல் இணையவழிக் குற்றங்கள் வரையிலான குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்டுள்ளன.

இந்தியா, வியட்நாம், சீனா, மியான்மர், பிலிப்பைன்ஸ் மற்றும் கம்போடியா ஆகிய நாடுகளைச் சேர்ந்த சந்தேக நபர்கள், சின்னமன் கார்டன்ஸ், மவுண்ட் லெவினியா, பொத்தல, சிலாபம் மற்றும் கொஸ்வத்த ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கைகளில் கைது செய்யப்பட்டதாகக் கூறினார்.

கைது செய்யப்பட்ட நபர்களில் பலர் வாடகை வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலக இடங்களில் இருந்து செயல்பட்டு வந்ததாகவும், சட்டவிரோத நோக்கங்களுக்காக வளாகங்கள் பயன்படுத்தப்பட்டால் சொத்து உரிமையாளர்களும் சட்டரீதியான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும் உதவி பொலிஸ் மா அதிபர் வூட்லர் குறிப்பிட்டார்.

அத்துடன் வீடுகள், அடுக்குமாடி குடியிருப்புகள் மற்றும் அலுவலக இடங்களை வாடகைக்கு விடும்போது, ​​வாடகைக்கு எடுப்பவர்கள் தொடர்பான விபரங்களை அருகிலுள்ள பொலிஸ் நிலையத்திற்குத் தெரிவிக்குமாறு கட்டிட உரிமையாளர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், வெளிநாட்டினருக்கு வாடகைக்கு விடும்போது பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு அவர் கேட்டுக்கொண்டார். சட்டவிரோத நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தவும்,கட்டிட உரிமையாளர்களைப் பாதுகாக்கவும் விழிப்புணர்வு அவசியம் என்றும் அவர் வலியுறுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here