அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையில் ஏற்பட்ட உடனடி போர் நிறுத்த உடன்பாட்டை இலங்கை வரவேற்றுள்ளது.
மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவிய பதற்றத்தை தணித்தல் மற்றும் நீண்டகால பிராந்திய மற்றும் உலகளாவிய ஸ்திரத்தன்மைக்கு இது முக்கிய படியாக அமையும் என இலங்கை பாராட்டியுள்ளது.
அமெரிக்கா மற்றும் ஈரான் இஸ்லாமிய குடியரசுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி உடனடி போர் நிறுத்தம், ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் திறத்தல் மற்றும் தொடர் பேச்சுவார்தைக்கான கட்டமைப்பு ஆகியவை உள்ளடங்கியுள்ளன.
இது தொடர்பில் இலங்கை வெளிவிவகார அமைச்சு வெளியிட்ட அறிவித்தலில் இவ்வாறு தன் வரவேற்பை வெளிப்படுத்தியுள்ளது
“தகராறுகளை அமைதியான முறையில் தீர்ப்பதில் இராஜதந்திரத்தின் ஆற்றலை இந்த ஒப்பந்தம் பிரதிபலிக்கிறது.
பிராந்தியத்தில் நீடித்த அமைதியை இந்த முயற்சி உறுதிப்படுத்தும் என இலங்கை நம்புகிறது” என மேலும் தெரிவித்துள்ளது.
இந்த இராஜதந்திர முன்னேற்றத்தை அடைவதில் மத்தியஸ்தர்களாக செயற்பட்ட பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசு மற்றும் கட்டார் அரசுக்கும், உதவிய அனைத்து பங்காளிகளுக்கும் இலங்கை தனது மனமார்ந்த பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளது.








