பொலன்னறுவையில் வைத்தியர் போல் நடித்து வந்த 59 வயது நபர் ஒருவர், தொடர் சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலன்னறுவை குற்றப் புலனாய்வுப் பிரிவு உறுதிப்படுத்தியுள்ளது.
குருணாகலை, பன்னால பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், செவ்வாய்க்கிழமை இரவு (05) பொலன்னறுவையில் உள்ள தீப உயன அருகே கைது செய்யப்பட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு குற்றங்கள் தொடர்பாக இவர் இதற்கு முன்னர் பொரல்லை , கண்டி, மினுவாங்கொட மற்றும் திவுலபிட்டிய காவல் நிலைய அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன் சந்தேக நபர் இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை அனுபவித்திருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து ஸ்டெதாஸ்கோப், வைத்தியர் சீருடை, போலி அடையாள அட்டை உள்ளிட்ட பொருட்களை பொலிஸார் பறிமுதல் செய்தனர்.
போலிச் சான்றுகளுடன் ஹிங்குரகொட வைத்தியசாலையின் மகப்பேறு பிரிவில் பணிபுரியும் மருத்துவர் போல் காட்டிக்கொண்டு, பொதுமக்களை ஏமாற்றி வந்ததாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் இன்று (06) பொலன்னறுவை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.








