வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் எதிர்நோக்கும் கடுமையான பிரச்சினைகள் குறித்து ஜனாதிபதியிடம் முறையிட்டுள்ள வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரனின் கோரிக்கையை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஏற்றுக்கொண்டுள்ளார்.
இதன்படி, ஜனாதிபதி விரைவில் முல்லைத்தீவிற்கு வருகைதந்து மீனவர்களை நேரடியாக சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை கேட்டறிவதற்கு ஒப்புதல் தெரிவித்துள்ளார்.
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பிரதிநிதிகள் மற்றும் ஜனாதிபதி இடையிலான சந்திப்பு நேற்று (19) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இச் சந்திப்பில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்களாக,
ரவிகரன் மற்றும் எட்டுப் பேர் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சி நாடாளுமன்ற குழு சந்திப்பின் போது பின்வரும் பிரச்சினைகளை முன்வைத்தனர்.
தமிழ் மக்களின் அரசியல் தீர்வு, மாகாண சபைத் தேர்தல் நடத்தல், வட–கிழக்கின் காணி பிரச்சினைகள், துயிலும் இல்லங்கள் விடுவிப்பு, பாதுகாப்புப் படையினரின் அதிகரித்த இராணுவப் பிரசன்னம், பௌத்தமயமாக்கல் செயற்பாடுகள், திருகோணமலையில் சர்ச்சைக்குரிய புத்தர் சிலை விவகாரம், வட–கிழக்கில் அதிகரித்து வரும் சட்டவிரோத கடற்றொழில் மற்றும் அதன் விளைவுகள், சட்டவிரோத கடற்றொழிலால் மீனவர்கள் குறித்து கலந்துரையாடியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் ரவிகரன் குறிப்பிட்டதாவது:
முல்லைத்தீவு, மன்னார், கிளிநொச்சி, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்கள் கடல்சார் வாழ்வாதாரத்தை சார்ந்தவை.
அதிகளவில் நடைபெற்று வரும் சட்டவிரோத கடற்றொழில் காரணமாக, உண்மையான மீனவர்கள் பொருளாதார ரீதியாக மோசமாகப் பாதிக்கப்படுகின்றனர்.
வட மாகாண மீனவர் இணையம் மற்றும் பல மீனவர் சங்கங்கள் ஜனாதிபதியைச் சந்திக்க விரும்புவதாகவும், அதற்கான கோரிக்கை கடிதங்கள் தமக்கு கிடைத்துள்ளதாகவும் என குறிப்பிட்டார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, முல்லைத்தீவிற்கு விரைவில் வருகைதந்து, மீனவர்களுடன் நேரடியாக சந்தித்து, பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை கேட்டறிந்து,
தீர்வுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்துள்ளதாக ரவிகரன் தெரிவித்துள்ளார்.
மேலும் 2009க்கு பிறகு வனத்துறையும் வனஜீவராசிகள் திணைக்களமும் ஆக்கிரமித்த காணி பிரச்சினைகள்
முல்லைத்தீவு மாவட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட பாதுகாப்புப் படை முகாம்கள் இருப்பது
இவை அனைத்தும் ஜனாதிபதியின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டதாக அவர் தெரிவித்தார்.








