யாழ்ப்பாணத்தில் டெங்கு நோய்ப் பரவல் திடீரென அதிகரித்து வருவதால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று யாழ் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆறுமுகம் கேதீஸ்வரன் தெரிவித்தார்.
நேற்றைய தினம் (19.11.2025) ஊடகங்களுக்கு அவர் வழங்கிய தகவலின்படி,
பருவமழைக்கு பின் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயாளிகள் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
இந்த ஆண்டு இதுவரை 1,220 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். இது கடந்த ஆண்டின் இதே காலத்தை ஒப்பிடும் போது இரண்டு மடங்கு அதிகம் என அவர் குறிப்பிட்டார்.
எனினும், இந்த ஆண்டில் யாழ் மாவட்டத்தில் டெங்கு தொடர்பான இறப்புகள் எதுவும் பதிவாகவில்லை என்று அவர் உறுதியளித்தார்.
வீடுகள், பணியிடங்கள், பாடசாலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் நீர் தேங்கும் இடங்களை அகற்றி, டெங்கு நுளம்பு இனப்பெருக்கத்தைத் தடுக்க அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.








