பிரித்தானிய அரசாங்கம்,ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படையை (IRGC)மற்றும் அதனுடன் தொடர்புடைய ஒரு குழுவை பிரிட்டனின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் கொண்டதாக அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது.
பிரித்தானியாவின் “அரச அச்சுறுத்தல் தடுப்பு சட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதை தொடர்ந்து, ஈரானில் உள்ள பிரிட்டன் தூதுவரை அழைத்து அது தொடர்பாக தனது கடும் எதிர்ப்பை ஈரான் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகிறது.
கடந்த சில மாதங்களாக ஐரோப்பா முழுவதும் தாக்குதல்களை நடத்துவதற்காக ஈரான் தனது போராளி குழுக்களை பயன்படுத்தியுள்ளதாக பிரிட்டன் அரசாங்கம் குற்றம் சாட்டுகிறது.
அதன் அடிப்படையில், லண்டனில் உள்ள ஈரானிய தூதரகத்தின் பொறுப்பு தலைவர் அலி நசீம்பர் விசாரணைக்காக அழைக்கப்பட்டார் என தெரிவிக்கப்படுகிறது.
இந்த சம்பவம் இடம்பெற்று ஒரு நாள் கடந்த நிலையில் ஈரான், பிரிட்டன் தூதுவரிடம் தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
வெளிநாட்டு அரசாங்கங்களை உளவு பார்த்தல் மற்றும் சீர்குலைவு நடவடிக்கைகள் போன்றவற்றிற்காக ஏனைய போராளி குழுக்களை ஈரான் பயன்படுத்துவதை தடுக்கும் நோக்கில், பிரிட்டன் சமீபத்தில் புதிய அதிகாரங்களை கொண்ட சட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த நடவடிக்கை காரணமாக இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவுகள் மேலும் பதற்றமான நிலையை அடைந்துள்ளதாக சர்வதேச செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.








