பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்கள் அடையாளம் காணப்பட்டு அவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக பாடசாலைகளில் புகை விசிறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.எம்.அப்துல் மலீக் தெரிவித்துள்ளார்.
பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் எப்.எம். உவைஸின் ஆலோசனைக்கமைய முதற் கட்டமாக பாடசாலைகளில் டெங்கு நுளம்பு பரவலைக் கட்டுப்படுத்தும் முகமாக புகை விசிறும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
அரச, தனியார் நிறுவனங்கள், மதத்தலங்கள் உட்பட டெங்கு நுளம்பு பரவும் இடங்களாக அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களில் புகை விசிறும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொது இடங்களில் காணப்படும் தென்னம் குரும்பை, யோகட் கப், வெற்றுப் போத்தல்கள், வெற்று டயர்கள், பொலித்தீன் கழிவுகள் போன்றவற்றை முறையாக அகற்ற வேண்டுமெனவும் அவர் கேட்டுள்ளார்.
டெங்கு நுளம்பு பரவக் கூடிய இடங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை துப்புரவு செய்யுமாறும் அதனை மீறுபவர்களுக்கெதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் அவர் தெரிவித்துள்ளார்.
பொது மக்கள் ஒன்று கூடும் இடங்கள், பாடசாலைகள், மதத்தலங்கள், அரச,தனியார் நிறுவனங்கள் ஆகியவற்றில் வார நாட்களில் சிரமதான பணிகளை முன்னெடுக்குமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.








