விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாகா படத்தில் நடித்த ரன்யா ராவ் சில மாதங்களுக்கு முன்னர் தங்க கடத்தல் வழக்கில் அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
துபாயிலிருந்து தனது ஜாக்கெட்டில் வைத்து 15 கிலோ தங்கத்தை கடத்தி வந்தார். அதனை கண்டுபிடித்த அதிகாரிகள் உடனடியாக ரன்யாவை கைது செய்தார்கள்.
இந்நிலையில் அவருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டிருக்கிறது. கர்நாடக மாநிலத்தை பூர்வீகமாகக் கொண்ட ரன்யா ராவ் கன்னட திரையுலகில் தனது திரைப்பயணத்தை 2014ஆம் ஆண்டிலிருந்து தொடங்கினார்.
நான் ஈ வில்லன் கிச்சா சுதீப் இயக்கிய படத்தில் அறிமுகமான அவர் அடுத்தடுத்து வாய்ப்புகளை பெற்றார்.
அழகு, நடிப்பு என அத்தனையும் இருந்ததால் கண்டிப்பாக அவர் பெரிய ரவுண்டு வருவார் என்றே எதிர்பார்க்கப்பட்டது.

கன்னடத்தில் மட்டும் நடித்துக்கொண்டிருந்த அவர் தமிழிலும் அறிமுகமானார்.
நினைத்தாலே இனிக்கும், ஹரிதாஸ் உள்ளிட்ட படங்களை தமிழில் இயக்கிய ஜி.என்.ஆர். குமரவேலன் வாகா திரைப்படத்தை விக்ரம் பிரபுவை ஹீரோவாக வைத்து இயக்கினார்.
அந்தப் படத்தில் அவருக்கு ஜோடியாக ரன்யா ராவ் நடித்தார்.
படம் பெரிதாக போகவில்லை. அதனைத் தொடர்ந்து கன்னடத்துக்கு சென்ற ரன்யா அங்கு பட்டாக்கி படத்தில் நடித்தார்.
அதுவும் தோல்வியில்தான் முடிந்தது. இதனால் அவருக்கு வாய்ப்புகள் பறி போயின.
இப்படியிருக்க துபாயிலிருந்து சில மாதங்களுக்கு முன்பு பெங்களூருவுக்கு விமானத்தில் வந்தார் ரன்யா ராவ்.
அப்போது காவலர் ஒருவர் உதவியுடன் விமான நிலைய அதிகாரிகளின் சோதனைகளிலிருந்து நழுவி செல்ல பார்த்தார். அதனை கவனித்து சந்தேகப்பட்ட அதிகாரிகள் உடனடியாக ரன்யாவை அழைத்து தீவிரமாக சோதனை செய்தார்கள்.
அப்போது தனது ஜாக்கெட்டில் 15 கிலோ தங்கத்தை அவர் கடத்தி வந்தது தெரியவந்தது.
அதனையடுத்து உடனடியாக கைது செய்யப்பட்டார். தொடர்ந்து அவரது வீட்டில் வருவாய் புலனாய்வு அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள்.
அந்த சோதனையிலும் சுமார் இரண்டு கோடியே 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கைப்பற்றினார்கள்.
மேலும் சட்ட விரோத பண பரிமாற்றம் நடந்திருக்கும் என்ற சந்தேகத்தில் அமலாக்கத்துறையும் ஒரு வழக்கு பதிவு செய்து விசாரித்தது.
அதனையடுத்து இந்த விவகாரத்தை நீதிமன்றம் விசாரித்தபோது வருவாய் புலனாய்வு இயக்குநரகம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவில்லை.
அதன் காரணமாக ரன்யாவுக்கு ஜாமீன் வழங்கியது கோர்ட். இதனால் மகிழ்ச்சியில் இருந்த ரன்யா. நிலைமை இப்படி இருக்க அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழும் ரன்யா கைது செய்யப்பட்டிருந்ததால் அவரால் ஜாமீனில் வர முடியவில்லை.
இந்நிலையில் அந்நிய செலாவணி பாதுகாப்பு மற்றும் கடத்தல் தடுப்பு சட்டத்தின் கீழே இருக்கும் ஆலோசனை வாரியம் அந்த வழக்கை விசாரித்தது.
அப்போது ரன்யாவுக்கு ஒரு ஆண்டு சிறைதண்டனை விதித்தும்; தண்டனை காலம் முடியும்வரை ரன்யாவால் பிணை எதுவும் கோர முடியாது என்றும் கூறி உத்தரவிட்டிருக்கிறது. இதனால் அவர் ஒரு வருடம் சிறையில் இருப்பது உறுதியாகியிருக்கிறது.








