தனியார்த்துறை ஊழியர்களுக்கும் இணைய முறையில் ரயில் சீசன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதியை அடுத்த மாதம் செப்டம்பரில் இருந்து ஆரம்பிக்க திட்டமிட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.
இன்று (21) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பில் அமைச்சர் இதனை கூறினார்.
இதற்கமைய, அக்டோபர் மாதத்திற்குள் எந்தவித சிக்கல்களும் இன்றி தனியார் துறை ஊழியர்களுக்கும் இணைய ரயில் சீசன் டிக்கெட் வசதியை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
அரசத்துறை ஊழியர்களுக்கு இணையத்தின் மூலம் ரயில் சீசன் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளும் வசதி கடந்த மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது.
இதற்கிடையில், நாடு முழுவதும் சாரதிகள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பை மேலும் அதிகரிக்கும் வகையில் பல புதிய சட்டங்கள் மற்றும் ஒழுங்கு விதிகள் அறிமுகப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.
அத்துடன், எதிர்வரும் செப்டம்பர் 19 ஆம் திகதி முதல் அதிவேக நெடுஞ்சாலைகளில் செல்லும் அனைத்து வாகனங்களின் சாரதிகள் மற்றும் பயணிகளும் பாதுகாப்பு பட்டி (பெல்ட்) அணிவது கட்டாயமாக்கப்படும் என்றும் அமைச்சர் இதன்போது குறிப்பிட்டார்.
இதற்கிடையில், மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களுக்கு எஸ்.எல்.எஸ் SLS தரத்திலான பாதுகாப்பு தலைக்கவசம் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளதுடன், எதிர்வரும் காலத்தில் மோட்டார் சைக்கிள்களுக்கென பிரத்தியேகமான வீதி வழித்தடம் ஒன்றை அறிமுகப்படுத்தவும் திட்டமிட்டுள்ளதாக அமைச்சர் மேலும் கூறியுள்ளார்.








