கம்பஹா, அஸ்கிரிய பகுதியில் பொலிஸாரின் உத்தரவை மீறி செலுத்தப்பட்ட வேன் ஒன்றை நோக்கி பொலிஸார் நேற்று (12) இரவு துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.

மேல் மாகாண புலனாய்வுப் பிரிவில் இருந்து கிடைத்த தகவலின்படி, வேன் ஒன்றில் கம்பஹா பகுதிக்கு போதைப்பொருள் விநியோகிக்கப்படுவதாக முன்கூட்டிய தகவல் கிடைத்ததை அடுத்து, வெலிவேரிய பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழு ஒன்று நேற்று சுற்றிவளைப்பு நடவடிக்கை ஒன்றை மேற்கொண்டிருந்தனர்.

இதற்கமைய, சம்பந்தப்பட்ட வேன் கம்பஹா உடுகம்பொல நோக்கி செல்வதாக தகவலை உறுதிப்படுத்திய பொலிஸ் அதிகாரிகள், குறித்த வேனை தந்திரமாக பின்தொடர்ந்து சென்றனர்.

உடுகம்பொல வீதியில் மல்வத்தை சந்தி பகுதியில், குறித்த வேனை, சாரதி வீதியோரம் நிறுத்தியுள்ளார். அப்போது பொலிஸ் அதிகாரிகள் ஜீப்பில் இருந்து இறங்கி வேனை பரிசோதிக்க முயன்றனர்.

இதன்போது பொலிஸார் வருவதை கண்ட வேன் சாரதி, வீதியில் சென்ற பல வாகனங்களை விபத்துக்குள்ளாக்கியதோடு , பின்னர் பொலிஸ் ஜீப்பையும் மோதி அதிகாரிகளையும் காயப்படுத்தி தப்பிச் செல்ல முயன்றுள்ளார்.

அந்த சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரிகள் வேனை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் வேன் சாரதியும் காயமடைந்தார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த சாரதியை பொலிஸ் பாதுகாப்புடன் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிப்பதற்கான நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

அதன் பின்னர் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், வேனுக்குள் இருந்து 15 கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் 9 கிராம் ஐஸ் போதைப்பொருளும் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here