தெஹிவளை, சிரிசங்கபோ வீதியில் அமைந்துள்ள வீடு ஒன்றின் மீது நேற்று முன் தினம் (11) அதிகாலை அடையாளம் தெரியாத நபர் ஒருவரால் நடத்தப்பட்ட குண்டுத் தாக்குதல் தவறுதலாக நடந்த ஒன்றாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

அந்த தாக்குதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். அவர்களின் தந்தையும் காயமடைந்து தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

சம்பந்தப்பட்ட குண்டுத் தாக்குதல், களுபோவில வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் நபரின் சகோதரரின் வீட்டை இலக்கு வைத்து இடம்பெற்று வந்த நிலையில்,அவர் வீடு மாறியதால் இந்த துயரமான சம்பவம் நடந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

உயிரிழந்த இரு குழந்தைகளின் உடல்களும் இன்று (12) மாலை அவர்களின் வீட்டிற்கு கொண்டு வரப்படவுள்ளன.

இதற்கிடையில், இன்று மொரட்டுவ, கட்டுபெத்த பகுதியில் நடந்த நிகழ்வு ஒன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் சஜீவ மெதவத்த, எந்த சந்தர்ப்பத்திலும் குற்றக் கும்பல்களுக்கு பொலிஸாரோ பொதுமக்களோ  இடமளிக்க போவதில்லை எனத் தெரிவித்தார்.

பாதாள கும்பல்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்காக புதிய தந்திரமாக கைக்குண்டு தாக்குதல்களை நடத்த ஆரம்பித்துள்ளதாகவும் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here